ஜார்க்கண்ட்: காவலர் உடல்தகுதி தேர்வில் 10 பேர் பலி; பா.ஜ.க. குற்றச்சாட்டு

ஜார்க்கண்டில் நடந்த காவலர் உடல்தகுதி தேர்வில் உயிரிழந்த 10 பேரின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.

Update: 2024-09-01 02:29 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்டின் ராஞ்சி, கிரிதி, ஹசாரிபாக், பலாமு, கிழக்கு சிங்பும் மற்றும் சாகேப்கஞ்ச் ஆகிய 7 மாவட்டங்களில் காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வு நடந்தது. இந்த தேர்வில் கலந்து கொண்டவர்களில் 10 பேர் உயிரிழந்து உள்ளனர் என பா.ஜ.க. குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளது.

இதுபற்றி அக்கட்சியின் மாநில தலைவரான பாபுலால் மராண்டி வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், இந்த தேர்வில் பங்கேற்றவர்கள் நள்ளிரவு முதல் வரிசையில் நிற்க வைக்கப்பட்டனர். அடுத்த நாள் காலையில் கொளுத்தும் வெயிலில் அவர்கள் ஓட வைக்கப்பட்டனர். காவலர் தேர்வு மையங்களில் போதிய சுகாதார வசதிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றச்சாட்டாக தெரிவித்து உள்ளார்.

10 பேர் பலியான சம்பவத்தில் நீதிமன்ற விசாரணை தேவை. அவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும், வேலைவாய்ப்பும் வழங்க வேண்டும் என டுவிட் பதிவில் குறிப்பிட்டு உள்ளார்.

இந்நிலையில், காவல் துறை வெளியிட்ட அறிக்கையில், காவலர் பணிக்கான உடல்தகுதி தேர்வில் சில மையங்களில் பங்கேற்ற ஒரு சிலர் துரதிர்ஷ்ட வகையில் மரணம் அடைந்து உள்ளனர். இதுபற்றி வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டு, அதற்கான காரணம் பற்றி விசாரிக்கப்பட்டு வருகிறது.

போதிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. மருத்துவ குழுக்கள், மருந்துகள், ஆம்புலன்ஸ் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை அனைத்து மையங்களிலும் கிடைக்கும்படி உறுதி செய்யப்பட்டு இருந்தன என்றும் தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்