ஒரே நாடு ஒரே தேர்தல்: ஐக்கிய ஜனதா தளம் வரவேற்பு

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

Update: 2024-09-18 11:59 GMT

புதுடெல்லி:

இந்தியாவில் மக்களவைக்கும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய பா.ஜ.க. அரசு தீவிரமாக கையில் எடுத்துள்ளது.

பா.ஜ.க.வின் தேர்தல் அறிக்கையிலும் இது முக்கிய வாக்குறுதியாக இடம்பெற்றிருந்தது. இதுதொடர்பாக ஆராய்வற்காக முன்னாள் ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் தலைமையில் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. இந்த குழு, ஒரே நாடு ஒரே தேர்தல் நடைமுறைக்கு ஆதரவாக பரிந்துரைகளை வழங்கியது.

அதில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை அமல்படுத்துவதற்காக 18 அரசியலமைப்பு திருத்தங்களை குழு பரிந்துரைத்துள்ளது. அவற்றில் பெரும்பாலான திருத்தங்களுக்கு மாநில சட்டசபைகளின் ஒப்புதல் பெறத் தேவையில்லை. எனினும், தேவையான சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்படவேண்டும் என்றும் கூறியிருந்தது.

இதையடுத்து, தற்போதைய ஆட்சிக் காலத்திற்குள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தலாம் என தகவல் வெளியானது. அதனை உறுதி செய்யும் வகையில், இத்திட்டம் தொடர்பாக உயர் மட்டக்குழுவின் பரிந்துரைகளுக்கு மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இனி நாடாளுமன்றத்தில் ஒப்புதல் பெறும் பணிகளை மத்திய அரசு தொடங்கும்.

இந்நிலையில், ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் தொடர்பான பரிந்துரைகளை மத்திய அமைச்சரவை ஏற்றுக்கொண்டதற்கு, பா.ஜ.க.வின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வரவேற்றுள்ளது.

ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவால் பரிந்துரைக்கப்பட்ட ஒரே நாடு, ஒரே தேர்தல் திட்ட பரிந்துரைகள், நாட்டிற்கு பெரிய அளவில் நன்மைகளை வழங்கும் என்றும், இத்திட்டம் வாக்குப்பதிவை அதிகரிக்க உதவும் என்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ராஜீவ் ரஞ்சன் பிரசாத் தெரிவித்தார்.

நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் யோசனையை ஆதரித்த கட்சிகளில் ஐக்கிய ஜனதா தளமும் ஒன்று. உயர்மட்டக் குழுவிடம் சமர்ப்பித்த அறிக்கையிலும் தனது ஆதரவை தெரிவித்துள்ளது. இதேபோல் தெலுங்கு தேசம் கட்சி, லோக் ஜனசக்தி கட்சி (ராம் விலாஸ்) உட்பட பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் கொள்கையளவில் இந்த கருத்தை ஆதரித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்