கொல்கத்தாவை போல் கோவையில்... பெண் பயிற்சி டாக்டரிடம் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற நபர்

கோவையில் பெண் டாக்டரிடம் அடையாளம் தெரியாத நபர் குடிபோதையில் தவறாக நடக்க முயன்ற விவரம் உடனடியாக போலீசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

Update: 2024-08-15 22:51 GMT

கோவை,

மேற்கு வங்காளத்தில் கொல்கத்தா நகரின் வடபகுதியில் ஆர்.ஜி. கார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றிய 31 வயது பயிற்சி பெண் டாக்டர் ஒருவர், கடந்த 9-ந்தேதி அதிகாலையில் பலாத்காரம் செய்யப்பட்டு, பின்னர் கொடூர கொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்தில் போலீசாருக்கு உதவியாக பணியாற்றி வந்த, சஞ்சய் ராய் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவர், 23-ந்தேதி வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டு உள்ளார். இதனை தொடர்ந்து, மருத்துவர்களுக்கு பாதுகாப்பு கோரி டாக்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சி.பி.ஐ. விசாரணை வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதன்பின், கொல்கத்தா ஐகோர்ட்டு உத்தரவின்பேரில், வழக்கு விசாரணை போலீசாரிடம் இருந்து சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோவையில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த பெண் பயிற்சி டாக்டரிடம், குடிபோதையில் நபர் ஒருவர் தவறாக நடக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுத்தனர்.

இந்த அதிர்ச்சிகர சம்பவம் பற்றி அந்த மருத்துவமனையின் டீன், டாக்டர் நிர்மலா கூறும்போது, கடந்த 14-ந்தேதி இரவு 9.30 மணியளவில் மர்ம நபர் ஒருவர், எங்களுடைய பெண் பயிற்சி டாக்டரிடம் தவறாக நடக்க முயன்றார். வண்டியில் ஏற முயன்ற அந்த பெண் டாக்டரிடம் அடையாளம் தெரியாத நபர் தவறாக நடக்க முயன்ற விவரம் உடனடியாக நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்தது.

இதனை தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அவர்கள் உடனடியாக நடவடிக்கையில் ஈடுபட்டனர். அந்த நபரை பிடித்து சென்று விசாரித்து வருகின்றனர். எங்களுடைய பயிற்சி மருத்துவ அதிகாரியும் சம்பவ பகுதியில் நிலைமை என்னவென கண்காணிப்பதற்காக சென்றார் என கூறியுள்ளார்.

கொல்கத்தாவில் பெண் பயிற்சி டாக்டர் பலாத்காரம் மற்றும் படுகொலை செய்யப்பட்ட கொடூர சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், மேற்கு வங்காளத்தின் தெருக்களில் ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று முன்தினம் நள்ளிரவில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம் இரவு 11.55 மணியளவில் தொடங்கியது. சுதந்திர தின கொண்டாட்டங்கள் ஒருபுறம் நடந்தபோதும், சிறிய மற்றும் பெரிய நகரங்களில் இருந்து மாணவிகள், தொழில் செய்வோர் மற்றும் இல்லத்தரசிகள் என பெண்கள் பலர் திரண்டு வந்திருந்தனர்.

அவர்கள் நீதி வேண்டும் என கோஷம் எழுப்பியபடி சென்றனர். சிலர் மெழுகுவர்த்திகளை ஏந்தியும், போஸ்டர்களை சுமந்தபடியும், மொபைல் போன்களில் ஒளியை எரிய விட்டபடியும் சென்றனர்.

இந்த போராட்டங்களுக்கு ஆதரவை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு இடங்களில் பெண்களுடன் ஆண்களும் நடந்து சென்றனர். போராட்டத்தின்போது மாற்றமும், நீதியும் வேண்டும் என்று அவர்கள் சுட்டி காட்டினர்.

அப்போது, ஆர்.ஜி. கார் மருத்துவமனை வளாகத்திற்குள் புகுந்த மர்ம நபர்கள் வாகனங்கள் மற்றும் பொது சொத்துகளை சேதப்படுத்தினர். போராட்டக்காரர்கள் போல் உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்ட அந்த கும்பலை கலைந்து போக செய்வதற்காக போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியும், தடியடி நடத்தியும் நிலைமையை சீராக்க முயன்றனர்.

இதனால், மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தவறியதற்காகவும், நீதியை நிலைநிறுத்தவும் மீண்டும் போராட்டத்தில் ஈடுபடுவது என பயிற்சி டாக்டர்களுக்கான கூட்டமைப்பு நேற்று அறிவித்தது. இந்நிலையில், 24 மணிநேர நாடு தழுவிய மருத்துவ சேவைகள் வாபஸ் அறிவிப்பும் வெளிவந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்