ஜிம் டிரைனர் உடன் தகாத உறவு: கண்டித்த கணவர் 2வது திட்டத்தில் கொலை - 3 ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த உண்மை

கணவரை தீர்த்துக்கட்ட 2 திட்டங்கள் தீட்டப்பட்ட நிலையில் முதல் திட்டம் தோல்வியடைந்தது. 2வது திட்டத்தில் கணவர் கொல்லப்பட்டார்.;

Update: 2024-06-19 04:23 GMT

சண்டிகர்,

அரியானா மாநிலம் சண்டிகரை சேர்ந்த தொழிலதிபர் வினோத் பரரா. இவர் கடந்த 2021ம் ஆண்டு டிசம்பர் 15ம் தேதி தனது வீட்டில் இருந்தபோது சுட்டுக்கொல்லப்பட்டார். வினோத்தை தேவ் சுனர் என்ற லாரி டிரைவர் சுட்டுக்கொன்றார்.

லாரி டிரைவர் தேவ் சுனரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், வினோத் காரில் சென்றபோது தேவ் சுனர் ஓட்டிச்சென்ற லாரி மோதியது. இந்த விபத்தில் படுகாயமடைந்த நிலையில் இந்த சம்பவத்தில் தேவ் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனால், தன் மீதான விபத்து வழக்கை திரும்பப்பெற மறுத்ததால் வினோத்தை சுட்டுக்கொன்றதாக தேவ் தெரிவித்தார்.

இதையடுத்து, கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இதனால், முன்விரோதம் காரணமாக வினோத் கொல்லப்பட்டதாக வழக்கு விசாரணை அனைத்தும் நிறைவடைந்தது. இந்நிலையில், வினோத் கொலையில் மர்மம் இருப்பதாகவும் அதை சரிவர விசாரிக்கும்படியும், வினோத்திற்கு நெருக்கமானவர்களுக்கும் இந்த கொலைக்கும் தொடர்பு இருக்கலாம் என்று சண்டிகர் மாவட்ட எஸ்.பி. அஜித் சிங் வாட்ஸ் அப் எண்ணுக்கு மெசேஜ் வந்தது. அந்த மெசேஜை அனுப்பியது ஆஸ்திரேலியாவில் உள்ள வினோத்தின் சகோதரர் பிரமோத் ஆவார். கொலை செய்யப்பட்ட வினோத்தின் மகளை ஆஸ்திரேலியாவில் உள்ள அவரது சகோதரர் பிரமோத் வளர்த்து வருகிறார்.



இதையடுத்து, 3 ஆண்டுக்களுக்கு முன் கொல்லப்பட்ட வினோத் கொலை வழக்கை போலீசார் மீண்டும் விசாரணைக்கு எடுத்தனர். அப்போது, வழக்கில் ஏதோ விடுபடுவதையும் சந்தேகம் இருப்பதையும் மாவட்ட எஸ்.பி. அஜித் கண்டுபிடித்தார்.

இது தொடர்பாக மாவட்ட எஸ்.பி. கூறுகையில், இந்த வழக்கை நான் படிக்கும்போது ஒரு நபர் விபத்து வழக்கை திரும்பப்பெற மறுத்ததற்காக மற்றொரு நபரால் கொலை செய்யப்படுவாரா? என்பதில் சந்தேகம் எழுந்தது. வாகனத்தை வேகமாக ஓட்டி விபத்தை ஏற்படுத்தியதற்கு மிகப்பெரிய தண்டனை கிடையாது. விபத்தை ஏற்படுத்திய நபருக்கு உடனடியாக ஜாமின் கிடைத்துவிடும். ஆனால், கொலைக்கான தண்டனை மிகவும் தீவிரமானது' என்றார்.

பின்னர், மாவட்ட எஸ்.பி. அஜித் சிங் அரியானா போலீஸ் கிரிமினல் பிரிவு அதிகாரி தீபக் குமாருடன் இணைந்து வினோத் கொலை வழக்கை பல்வேறு கோணங்களில் மீண்டும் விசாரித்தனர். அப்போது திடுக்கிடும் உண்மை வெளியானது.

வினோத் கொலை வழக்கில் 3 ஆண்டுகளுக்குப்பின் வெளிவந்த உண்மை:

போலீசார் நடத்திய விசாரணையில் வினோத்தை கொலை செய்த தேவ் சுனர் சண்டிகரில் ஜிம் டிரைனராக வேலை செய்யும் சுமித் என்பவரின் நண்பர் என்பது தெரியவந்தது. அந்த ஜிம்மில் கொலை செய்யப்பட்ட வினோத்தின் மனைவி நித்தி பரரா உடற்பயிற்சி செய்ய செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது தெரியவந்தது. இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் ஜிம் டிரைனர் சுமித்திடம் விசாரணை நடத்தினர். அப்போது, திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

ஜிம்மில் டிரைனராக வேலை பார்த்து வந்த சுமித்திற்கும் ஜிம்மில் உடற்பயிற்சி செய்ய வந்த வினோத்தின் மனைவி நித்திக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்துள்ளனர். அதேவேளை, மனைவி மற்றும் ஜிம் டிரைனர் இடையேயான கள்ளக்காதல் விவகாரம் வினோத்திற்கும் தெரியவந்துள்ளது. இதையடுத்து, மனைவியை வினோத் கண்டித்துள்ளார். இது தொடர்பாக வீட்டில் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. மேலும், தனது மனைவியை விட்டு விலகும்படி ஜிம் டிரைனர் சுமித் இடம் வினோத் கூறியுள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த நித்தி தனது கள்ளக்காதலன் சுமித் உடன் சேர்ந்து கணவர் வினோத்தை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். இதற்காக பஞ்சாப்பை சேர்ந்த லாரி டிரைவர் தேவ் சுனரை அனுகியுள்ளனர். தேவிற்கு 10 லட்ச ரூபாய் கொடுத்து வினோத்தை லாரி ஏற்றி கொலை செய்ய திட்டம் வகுத்துக்கொடுத்துள்ளனர்.

அந்த திட்டத்தின்படி, கடந்த 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி காரில் சென்ற வினோத் மீது தேவ் சுனர் லாரியை கொண்டு மோதியுள்ளார். இந்த சம்பவத்தில் வினோத் படுகாயங்களுடன் உயிர் தப்பினார். கணவர் உயிர் பிழைத்ததால் நித்தி ஆத்திரமடைந்துள்ளார். பின்னர், தனது கள்ளக்காதலன் சுமித் உடன் சேர்ந்து கணவரை சுட்டுக்கொல்ல 2வது திட்டத்தை தீட்டியுள்ளார்.

அதன்படி, விபத்தை ஏற்படுத்திய தேவ் சுனரை சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே எடுத்துள்ளனர். அவரிடம் வினோத்தை கொலை செய்ய தீட்டபட்ட 2வது திட்டத்தை கூறினார். அந்த திட்டத்தின்படி, விபத்து வழக்கை திரும்பப்பெற பேச்சுவார்த்தை நடத்துவதுபோல் வினோத்தின் வீட்டிற்கு லாரி டிரைவர் தேவ் சுனர் வந்துள்ளார். அப்போது, தேவ் சுனர் தான் மறைத்து கொண்டுவந்த துப்பாக்கியை கொண்டு வினோத்தை சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் வினோத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பின்னர், விபத்து வழக்கை திரும்பப்பெறாத ஆத்திரத்தில் வினோத்தை சுட்டுக்கொன்றதாக கைதான தேவ் சுனர் போலீசில் தெரிவித்துள்ளார்.

 


ஆனால், 2வது திட்டப்படி வினோத்தை அவரது மனைவி நித்தியும் அவரது கள்ளக்காதலன் சுமித்தும் லாரி டிரைவர் தேவ் சுனரை ஏவி கொலை செய்துள்ளனர்.

வினோத்தை கொலை செய்தபின், நித்தி அவரது கள்ளக்காதலன் சுமித் உடன் மணிலாவுக்கு சுற்றுலா சென்றுள்ளார். வினோத் - நித்திக்கு ஒரு மகள் உள்ள நிலையில் தனது மகளை ஆஸ்திரேலியாவில் உள்ள வினோத்தின் சகோதரர் வீட்டிற்கு அனுப்பியுள்ளார். பின்னர், வினோத்தும் நித்தியும் ஒன்றாக வாழ்ந்துள்ளனர். மேலும், வினோத்தை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற லாரி டிரைவர் தேவ் சுனரின் வீட்டு செலவு மற்றும் வழக்கு தொடர்பான செலவுக்கு நித்தி பணம் கொடுத்துள்ளார். கணவர் வினோத் கொலை செய்யப்பட்ட நிலையில் அவரது பெயரில் உள்ள இன்சூரன்ஸ் பணம் நித்திக்கு வந்துள்ளது. அந்த பணத்தை தேவ் சுனரின் குடும்பம், வழக்கு செலவுக்கு கொடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.

இதையடுத்து, கள்ளக்காதலனான ஜிம் டிரைனர் சுமித் உடன் சேர்ந்து கணவர் வினோத்தை திட்டம் தீட்டி கொன்ற நித்தியை போலீசார் கைது செய்தனர். லாரி டிரைவர் சுனர் ஏற்கனவே சிறையில் உள்ள நிலையில் ஜிம் டிரைனர் சுமித் மற்றும் நித்தியும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

கள்ளக்காதலை கண்டித்த கணவரை ஜிம் டிரைனருடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு குற்றத்தை மறைத்த பெண்ணை 3 ஆண்டுகளுக்குபின் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்