கடும் பனிமூட்டம்: டெல்லியில் விமான சேவை பாதிப்பு
டெல்லியில் 400-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமானது.;
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான குளிர் நிலவுகிறது. காலை நேரத்தில் பனிமூட்டமும் அதிகமாக உள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த அவதியடைந்து வருகிறார்கள். இது நேற்றும் நீடித்தது.அதன்படி டெல்லி முழுவதும் நேற்று காலையில் பனியால் மூடப்பட்டு இருந்தது. குறைந்தபட்ச வெப்ப நிலை 7 டிகிரி செல்சியசாக இருந்தது. கடுமையான பனி மூட்டம் காரணமாக சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் மெதுவாகவே இயக்கப்பட்டன.
டெல்லி விமான நிலையத்தில் நேற்று அதிகாலையில் சேவை மிகவும் பாதிக்கப்பட்டது. பனிமூட்டத்தால் பார்வைத்திறன் பூஜ்ஜிய மீட்டராக இருந்தது. இதனால் விமானங்கள் தாமதமாகவே இயக்கப்பட்டன. தரையிறங்கவும், புறப்படவும் முடியாததால் 400-க்கும் மேற்பட்ட விமானங்களின் சேவை தாமதமானது. எனினும் எந்த விமானமும் ரத்து செய்யப்படவோ, திருப்பி விடவோ இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.விமானங்கள் தாமதமானதால் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகினர்.