டெல்லியில் நாளுக்கு நாள் மோசமடையும் காற்றின் தரம்
டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
தலைநகர் டெல்லியில் குளிர்காலம் தொடங்கியது முதலே காற்று மாசு அதிகரித்து காணப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் காற்றின் தரம் இப்படித்தான் மோசமடையும்.
இந்நிலையில், டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வருகிறது. மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவுகளின்படி, கடந்த 24 மணி நேரத்தில் டெல்லியில் காற்று தரக் குறியீடு (AQI) 273 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் 'மோசமான' பிரிவில் இருந்ததால், டெல்லியில் இன்று காலை புகை மூட்டமாக காணப்பட்டது.
சில பகுதிகளில் காற்றின் தரம் மோசமாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், முண்ட்கா மற்றும் பவானாவில் காற்றின் தரக்குறியீடு 366 ஆகவும், வஜிர்பூரில் 355, ஜஹாங்கிர்புரில் 347 மற்றும் ஆனந்த் விஹார் பகுதியில் 333 ஆகவும் பதிவாகியுள்ளது. இந்த அனைத்து பகுதிகளிலும் காற்றின் தரம் மிகவும் மோசமான பிரிவில் உள்ளதாக தரவு காட்டுகிறது. காற்று மாசை கட்டுப்படுத்த டெல்லி அரசு பல பகுதிகளில் தண்ணீர் பிய்ச்சி காற்றின் தரத்தை மேம்படுத்த முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
காற்றின் தரம் 50 க்கு கீழ் இருந்தால் நல்லது. 51 முதல் 100 வரை இருந்தால் திருப்தி, 101 முதல் 200 க்கு இடையே இருந்தால் அது மிதமானது. 201 முதல் 300 இடையே இருந்தால் அது மோசமானது, 301 மற்றும் 400 இடையே இருந்தால் மிக மோசமானது என வகைப்படுத்தப்பட்டுள்ளது.
டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலை 20.2 டிகிரி செல்சியசாக பதிவாகியுள்ளது, இது இயல்பை விட 1.8 புள்ளிகள் அதிகமாக உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) தெரிவித்துள்ளது. மேலும் டெல்லியில் இன்று அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.