திடீரென முடங்கிய விண்டோஸ்.. விமான சேவைகள், பங்குச்சந்தைகள் கடும் பாதிப்பு

விண்டோஸ் அமைப்பில் ஏற்பட்ட பிரச்சினை, உலகெங்கிலும் உள்ள பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது.

Update: 2024-07-19 07:56 GMT

புதுடெல்லி:

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸ் இயங்குதளம் இன்று மதியம் திடீரென முடங்கியது. இதனால் உலகம் முழுவதும் விண்டோசை பயன்படுத்தும் பெரும்பாலான பயனர்களின் கம்ப்யூட்டர் திரையில் புளூ ஸ்கிரீன் ஆப் டெத் (Blue Screen of Death) என்ற எரர் தோன்றியது. அதில், 'உங்கள் கணினியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். நடந்த தவறு தொடர்பான தரவுகளை சேகரித்து வருகிறோம். அதன்பின்னர், ரீஸ்டார்ட் செய்வோம்" என குறிப்பிடப்பட்டிருந்தது.

இதனால் விண்டோஸ் இயங்குதளத்தை பயன்படுத்துவோர் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். கம்ப்யூட்டரில் ஆட்டோ அப்டேட் வைத்திருந்தவர்கள்தான் முதலில் இந்த பாதிப்பை சந்தித்தனர். சிலருக்கு கம்ப்யூட்டர்கள் திரும்பத் திரும்ப ரீஸ்டார்ட் ஆகின. எனினும் புளூ ஸ்கிரீன் பாதிப்பு சரியாகவில்லை.

விண்டோஸ் செயலிழந்ததால் விமான துறை, மார்க்கெட்டுகள், வணிக நிறுவனங்கள், வங்கிகள், பங்குச்சந்தைகள் என பல்வேறு துறைகளில் பணிகள் முடங்கி உள்ளன. இந்தியாவில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. விண்டோஸ் செயல்படாததால் விமானங்களை இயக்க முடியாத நிலை உள்ளது. 

சென்னை உள்ளிட்ட பல்வேறு விமான நிலையங்களில் விமானங்களை இயக்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இந்திய விமான நிறுவனங்கள் இந்த பாதிப்பு குறித்து பயணிகளுக்கு தகவல் அனுப்பி உள்ளது. 

சைபர் செக்யூரிட்டி நிறுவனமான கிரவுட்ஸ்டிரைக் (Crowdstrike) அப்டேட்டில் ஏற்பட்ட குழப்பமே இந்த சிக்கலுக்கு காரணம் என தெரியவந்துள்ளது. மைக்ரோசாப்ட் சேவைகளில் பிரச்சினை ஏற்பட்டதை கிரவுட்ஸ்டிரைக் உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த தொழில்நுட்ப பிரச்சினையை சரி செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்தது.

Live Updates
2024-07-19 13:08 GMT

மைக்ரோசாப்ட் இயங்கு தளத்தில்  ஏற்பட்ட பாதிப்பு - 10 வங்கிகளில் மட்டும் சிறிய அளவிலான பாதிப்புகள் இருந்தது -ரிசர்வ் வங்கி விளக்கம்

2024-07-19 12:31 GMT

CrowdStrike-ன் பால்கான் சென்சருக்கான அப்டேட் காரணமாக தற்போதைய எரர் ஏற்பட்டுள்ளது. எனினும் மற்றொரு அப்டேட் மூலம் இந்த சிக்கலை சரி செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. அதுவரை, இதனை சரிசெய்வதற்கான செயல்முறையை கிரவுட் ஸ்டிரைக் வெளியிட்டுள்ளது. அதன்படி, விண்டோஸ் 10-ல் தற்போது ஏற்பட்டுள்ள ப்ளூ ஸ்கிரீன் எரர் சிக்கலைச் சரிசெய்ய வழிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

1.விண்டோஸ் இயங்குதளத்தை பாதுகாப்பான மோ (Safe Mode) அல்லது WRE மோடில் பூட் செய்ய வேண்டும்.

2. C:\Windows\System32\drivers\CrowdStrike-க்கு செல்லவும்.

3."C-00000291*.sys" என்ற பைலை கண்டுபிடித்து, டெலிட் செய்யவும்.

4. இறுதியாக எப்போதும் போல் இயங்குதளத்தை பூட் செய்யவும்.

2024-07-19 12:03 GMT

மைக்ரோசாப்ட் குளறுபடி காரணமாக நாடு முழுவதும் 192 இண்டிகோ விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. விமான முன்பதிவு மற்றும் பணத்தை திரும்ப வழங்குவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இண்டிகோ நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. பிரச்சினையை தீர்க்க மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம் என்றும் இண்டிகோ தெரிவித்துள்ளது.

2024-07-19 11:13 GMT

அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் தங்களது சேவையை மீண்டும் தொடங்கியுள்ளது. மைக்ரோசாப் விண்டோசில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டு இருந்தது. தற்போது பிரச்சினை சீர் செய்யப்பட்டு விமான சேவை தொடங்கியுள்ளதாக அமெரிக்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

2024-07-19 11:10 GMT

மும்பை,

பிரபல மென்பொருள் நிறுவனமான மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் விண்டோஸில் ஏற்பட்ட திடீர் கோளாறால் பல்வேறு சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஐடி நிறுவன ஊழியர்களின் கம்ப்யூட்டர்கள் முடங்கியதால் அவர்களின் பணி பாதுகாக்கப்பட்டுள்ளது. சாப்ட்வேர் அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல் தான் கோளாறு ஏற்படுவதற்கு காரணம் என்று சொல்லப்படுகிறது. அப்டேட் செய்தவர்களின் கணினிகளில் 'புளூ ஸ்க்ரீன் எரர்' காண்பிக்கிறது.

இதுதொடர்பாக மைக்ரோசாப்ட் நிறுவனம் தெரிவித்துள்ளதில் Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் சாப்ட்வேரில் குளறுபடி ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்த திடீர் சிக்கலால் பல நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் பாதிப்பை சந்தித்துள்ளன. இதனிடையே, வங்கி சேவையில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று நாட்டின் முன்னணி பொதுத்துறை நிறுவனமான எஸ்.பி.ஐ தெரிவித்துள்ளது. 

2024-07-19 11:08 GMT

மைக்ரோசாப்ட் பிரச்சினையால் இதுவரை உலகம் முழுவதும் 1,390 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானம் வருகை,புறப்பாடு, பதிவு உள்ளிட்டவை முடங்கியுள்ளன. அமெரிக்காவில் 500-க்கும் மேற்பட்ட விமானங்கள், ஜெர்மனியில் 92, இத்தாலியில் 45 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மென்பொருள் பிரச்சினையால் இந்தியாவில் 150-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து  செய்யப்பட்டு இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்