சுப்ரீம் கோர்ட்டு: 2 புதிய நீதிபதிகள் பதவியேற்பு
சுப்ரீம் கோர்ட்டில் காலியாக உள்ள 2 நீதிபதிகளை நியமனம் செய்வதற்கு, கடந்த 16-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.;
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதி அனிருத்தா போஸ், நடப்பு ஆண்டின் ஏப்ரல் 10-ந்தேதி ஓய்வு பெற்றார். இதேபோன்று, நீதிபதி ஏ.எஸ். போபண்ணா இந்த ஆண்டின் மே 19-ந்தேதி ஓய்வு பெற்றார். அவர்கள் இருவரும் ஓய்வு பெற்ற நிலையில், காலியாக இருந்த அந்த இரு பணியிடங்களுக்கும் நீதிபதிகளை நியமனம் செய்யும் பணியை சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் மேற்கொண்டது.
சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியத்தில் இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, பி.ஆர். கவாய், சூரிய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
இதன்படி, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய முடிவானது. இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் கொலீஜியம் சமீபத்தில், ஜம்மு மற்றும் காஷ்மீர் மற்றும் லடாக் ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியான நாங்மெய்காபம் கோடீஸ்வர சிங் மற்றும் சென்னை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியான ஆர். மகாதேவன் ஆகியோரை சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக நியமிப்பதற்கு பரிந்துரை செய்திருந்தது.
இதனையேற்று அவர்கள் இருவரையும் நியமனம் செய்வதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த இரு தினங்களுக்கு முன் வெளியிட்டது.
இதுபற்றி மத்திய சட்ட மற்றும் நீதி துறைக்கான மந்திரி அர்ஜுன் ராம் மேக்வால் அவருடைய எக்ஸ் சமூக ஊடக பதிவில் வெளியிட்ட செய்தியில், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அதிகாரங்களின்படி, இந்திய தலைமை நீதிபதியுடன், ஜனாதிபதி கலந்து ஆலோசனை செய்து விட்டு, சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகளாக என். கோடீஸ்வர சிங் மற்றும் ஆர். மகாதேவன் ஆகிய இருவரை நியமனம் செய்ய உள்ளார் என தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதில், மணிப்பூரில் இருந்து முதன்முறையாக ஒருவர் சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக நியமனம் செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.
இரு நீதிபதிகளையும் பரிந்துரைக்கும்போது, பன்முகத்தன்மையின் முக்கியத்துவம் பற்றி கொலீஜியம் சுட்டி காட்டியிருந்தது. நீதிபதிகள் நியமனத்திற்கு, கடந்த 16-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கினார்.
இதன்படி, நீதிபதிகள் இருவரும் இன்று முறைப்படி பதவியேற்று கொண்டனர். அவர்களுக்கு சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று முறைப்படி பதவி பிரமாணம் செய்து வைத்துள்ளார்.
நீதிபதிகளின் நியமனம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் வெளியிட்ட செய்தியில், நீதிமன்ற செயல்பாடு, நிர்வாகத்தில் புத்திகூர்மை, ஒருமைப்பாடு மற்றும் மதிப்பு ஆகியவற்றிற்காக கோடீஸ்வர சிங்கை, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமிப்பது சிறப்பாக இருக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது.
நீதி துறையில் நல்ல அனுபவம் வாய்ந்த நீதிபதி மகாதேவனின் பணி மற்றும் ஐகோர்ட்டின் ஒரு மூத்த நீதிபதி ஆகியவற்றால், சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக அவரை நியமிப்பது சிறப்பான முறையில் பொருந்தும் என்றும் சுப்ரீம் கோர்ட்டு கொலீஜியம் பார்க்கிறது என தெரிவித்து இருந்தது.
இந்த சூழலில், இரு நீதிபதிகளின் நியமனம் இன்று நடந்துள்ளது. இதனால், இந்திய தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உள்பட 34 நீதிபதிகள் என்ற முழு பலத்துடன் சுப்ரீம் கோர்ட்டு செயல்படும்.