டொனால்டு டிரம்ப் மீது துப்பாக்கி சூடு: பிரதமர் மோடி கண்டனம்
அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
அமெரிக்க அதிபர் தேர்தல் நவம்பர் 5-ம் தேதி நடைபெற உள்ளது. இதில், முக்கிய கட்சிகளாக ஜனநாயக கட்சி மற்றும் குடியரசு கட்சி நேருக்கு நேர் மோத உள்ளன. ஜனநாயக கட்சி வேட்பாளராக தற்போதைய அதிபர் ஜோ பைடன் களமிறங்கியுள்ளார். அதேபோல், குடியரசு கட்சி வேட்பாளராக முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் களமிறங்கியுள்ளார்.
தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இரு வேட்பாளர்களும் தீவிர பிரசாரம் மற்றும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், பென்சில்வேனியா மாகாணம் பட்லர் நகரில் நடைபெற்ற பிரசார பொதுக்கூட்டத்தில் குடியரசு கட்சி அதிபர் வேட்பாளர் டொனால்டு டிரம்ப் பங்கேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுக்கூட்டத்தில் டொனால்டு டிரம்ப் பேசிக்கொண்டிருந்தபோது திடீரென கூட்டத்தில் இருந்த நபர் டிரம்ப்பை குறிவைத்து துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். இந்த துப்பாக்கி சூடு தாக்குதலில் டொனால்டு டிரம்ப் காதில் ரத்த காயம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தால் கூடியிருந்த மக்கள் பெரும் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக பாதுகாப்பு பணியில் இருந்த அதிகாரிகள் டிரம்ப்பை சுற்றி பாதுகாப்பு அரணாக மாறினர். இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இதையடுத்து, துப்பாக்கி சூடு நடத்திய நபர் பாதுகாப்பு படையினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்த டொனால்டு டிரம்ப்க்கு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டொனால்டு டிரம்ப் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில், "எனது நண்பரும், முன்னாள் அமெரிக்க அதிபருமான டொனால்ட் டிரம்ப் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் குறித்து அறிந்து ஆழ்ந்த கவலையடைந்தேன். இந்த சம்பவத்தை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலிலும் ஜனநாயகத்திலும் வன்முறைக்கு இடமில்லை. அவர் விரைவில் குணமடைய வாழ்த்துகிறேன்.
எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் இந்த தாக்குதலில் உயிரிழந்தவரின் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் மற்றும் அமெரிக்க மக்களுடன் உள்ளன" என்று தெரிவித்துள்ளார்.