மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து.. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய நோயாளிகள்

தேவையற்ற பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தளத்தில் தீ விபத்து ஏற்பட்டதாக மாவட்ட கலெக்டர் ஜிதேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார்.

Update: 2024-05-27 08:04 GMT

பாக்பத்:

உத்தர பிரதேசத்தின் பாக்பத் மாவட்டம் பதாவத் பகுதியில் பல்நோக்கு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையின் மூன்றாவது தளத்தில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தளத்தின் ஒரு பகுதியில் ஆரம்பித்த தீ, மளமளவென அந்த தளம் முழுவதும் பரவி பற்றி எரிந்தது. இதனால் நெருப்பு பிழம்பாக காட்சியளித்தது. அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்தது. மருத்துவமனை ஊழியர்கள் மற்றும் அங்கு சிகிச்சை பெற்ற நோயாளிகள் பீதி அடைந்தனர்.

இதுபற்றி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கடுமையாக போராடி தீயை அணைத்தனர். இதனால் மற்ற தளங்களுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டதுடன், நோயாளிகளும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். தீ விபத்தினால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

தேவையற்ற பொருட்கள் சேகரித்து வைக்கப்பட்டிருந்த மூன்றாவது தளத்தில் தீப்பிடித்ததாகவும், 12 நோயாளிகள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகவும் மாவட்ட கலெக்டர் ஜிதேந்திர பிரதாப் சிங் தெரிவித்தார். கழிவுப் பொருட்களை அகற்றும்படி 15 நாட்களுக்கு முன்பே நோட்டீஸ் வழங்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மருத்துவமனையின் இரண்டு தளங்களுக்கு மட்டுமே தீயணைப்பு துறையின் தடையில்லா சான்றிதழ் உள்ளது என்றும், இது குறித்து விசாரணை நடந்து வருவதாகவும் கலெக்டர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்