நீக்கப்பட்ட பகுதிகளை மீண்டும் சேர்க்க வேண்டும்: சபாநாயகருக்கு ராகுல் காந்தி கடிதம்
மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது கடமை, அதைத்தான் தான் செய்ததாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
அவை விதி எண் 380-ன்படி நீக்கத் தேவையற்ற பகுதிகளையும் நீக்கியுள்ளதாக மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், "ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் எனது உரைகள் நீக்கப்பட்டுள்ளது, இது விதி 380-ன் வரம்பிற்குள் வராது.
எனது உரையிலிருந்து சில பகுதிகள் நீக்கப்பட்டிருப்பது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது. மக்கள் பிரச்சினைகளை அவையில் எழுப்ப வேண்டியது எனது கடமை அதைத்தான் நான் செய்தேன்.
மக்களவையில் ஜூலை 1ந் தேதி நான் பேசியதை மீண்டும் அவைக் குறிப்பில் சேர்க்க வேண்டும். நாட்டின் கள நிலவரம் மற்றும் உண்மையான தகவல்களையே பேசினேன். எனது பேச்சின் முக்கியப் பகுதிகளை நீக்கி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளுக்கு முரணானது. சபாநாயகரின் செயல் ஜனநாயகத்துக்கு விரோதமானது. மக்களின் பிரச்சினைகளை பேசுவதற்கு ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் உரிமை உள்ளது.
பா.ஜனதா எம்.பி. அனுராக் தாக்கூரின் பேச்சில் குற்றச்சாட்டுகள் நிறைந்திருந்தன, இருப்பினும், ஒரே ஒரு வார்த்தை மட்டும் நீக்கப்பட்டது. இது முற்றிலும் தவறான, ஒரு சார்பான நடவடிக்கை ஆகும். உங்கள் விளக்கம் தர்க்க ரீதியாக இல்லை என்பதை மரியாதையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று அதில் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.