ஜனவரி 1 முதல் அமல்: 'ஹெல்மெட்' அணியாத அரசு ஊழியர்களின் ஓட்டுனர் உரிமம் ரத்து

புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Update: 2024-12-18 15:49 GMT

புதுச்சேரி,

புதுச்சேரியில் மீண்டும் வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் 'ஹெல்மெட்' அணிய வேண்டும் என போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், புதுச்சேரி போக்குவரத்து போலீஸ் சூப்பிரண்டு பிரவீன்குமார் திரிபாதி, புதுவை அரசு துறை தலைவர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் நாளுக்கு நாள் வாகனங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக விபத்து அதிகரிக்கிறது. எனவே உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இதில இருசக்கர வாகனங்களில் செல்வோர் ஹெட்மெட் அணியாமல் உள்ளதால் விபத்தில் சிக்கி அதிகம்பேர் உயிரிழப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

எனவே புதுச்சேரியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு, தலைக்கவசம் அணிவதன் மூலமாக 'விபத்து இறப்பில்லா புதுச்சேரி நிச்சயம்' என்ற இலக்கை அடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி வருகிற ஜனவரி 1-ந் தேதி முதல் இருசக்கர வாகனங்களை ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்திருப்பவரும் ஹெட்மெட் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

அதன்படி புதுச்சேரி அனைத்து அரசு துறை அதிகாரிகள், ஊழியர்கள் இருசக்கர வாகனங்களில் செல்லும்போது கட்டாயம் ஹெல்மெட் அணிவதை பின்பற்ற வேண்டும். இதனை துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். தவறும்பட்சத்தில் மோட்டார் வாகன சட்டத்தின்படி ரூ.ஆயிரம் அபராதமும், 3 மாதம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்ய பரிந்துரைக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்