பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்கள் - பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்

பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

Update: 2024-11-15 09:15 GMT

பாட்னா,

பீகார் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மோடி, பிர்சா முண்டாவின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு ஜமுய் மாவட்டத்தில் நடைபெற்ற 'ஜன்ஜாதிய கவுரவ் திவாஸ்' விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் பிர்சா முண்டாவின் நினைவாக ஒரு நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார்.

பிரதமர் ஜன்ஜாதி ஆதிவாசி நியாய மகா அபியான் (PM-JANMAN) கீழ் பழங்குடியின குடும்பங்களுக்காக கட்டப்பட்ட 11,000 வீடுகளின் 'கிரிஹ் பிரவேஷ்' நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார். அதோடு, பீகாரில் ரூ.6,640 கோடி மதிப்பிலான வளர்ச்சி திட்டங்களை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார்.

இந்த திட்டங்கள் பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில் உள்கட்டமைப்பு, சுகாதாரம், கல்வி மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதற்காக தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி 'பி.எம்.-ஜன்மன்'(PM-JANMAN) திட்டத்தின்கீழ் 23 நடமாடும் மருத்துவ மையங்களையும், தொலைதூர பழங்குடி பகுதிகளில் சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்காக 30 மருத்துவ மையங்களையும் பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும் மத்திய பிரதேசத்தில் சிந்த்வாரா மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் பழங்குடியின சுதந்திரப் போராளிகள் அருங்காட்சியகங்களையும், பழங்குடி சமூகங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தவும், பாதுகாக்கவும் ஸ்ரீநகர் மற்றும் காங்டாக்கில் இரண்டு பழங்குடி ஆராய்ச்சி நிறுவனங்களையும் மோடி திறந்து வைத்தார். அதோடு, பழங்குடியினர் பகுதிகளில் 500 கி.மீ. புதிய சாலைகள் மற்றும் 100 பல்நோக்கு மையங்கள் அமைப்பது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்