மோசடி வழக்கு; நேரில் ஆஜராக பாலிவுட் நடிகர் தர்மேந்திராவுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்
மோசடி வழக்கு தொடர்பாக பாலிவுட் நடிகர் தர்மேந்திரா நேரில் ஆஜராக வேண்டும் என டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த சுஷில் குமார் என்பவர் டெல்லி கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், உத்தர பிரதேசத்தில் 'கரம் தரம் தாபா' என்ற உணவக நிறுவனத்தின் கிளையை தொடங்குவதற்காக பாலிவுட் நடிகர் தர்மேந்திரா சார்பில் ஒருவர் தன்னை தொடர்பு கொண்டதாகவும், அதற்கான முதலீடாக ரூ.17.70 லட்சத்தை கடந்த 2018-ம் ஆண்டு கொடுத்ததாகவும், ஆனால் சொன்னபடி உணவகத்தை தொடங்காமல் தன்னை ஏமாற்றிவிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த வழக்கு கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, இந்த வழக்கில் மோசடி மற்றும் கிரிமினல் சதித்திட்டம் நடந்திருப்பதற்கான சாத்தியங்கள் இருப்பதை முதற்கட்ட சாட்சியங்கள் சுட்டிக்காட்டுவதாக நீதிபதி தெரிவித்தார். இதையடுத்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள 89 வயதான பாலிவுட் நடிகர் தர்மேந்திரா உள்பட 3 பேர், வரும் பிப்ரவரி 20-ந்தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராகுமாறு சம்மன் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.