ராகுல் காந்திக்கு எதிரான என்.டி.ஏ. தலைவர்களின் மோசமான கருத்துகள்: மோடிக்கு கடிதம் எழுதிய கார்கே

பா.ஜ.க.வினருக்கு ஒழுக்கத்தை கற்றுக்கொடுக்க வேண்டும் என்று என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

Update: 2024-09-17 16:11 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அமெரிக்க பயணம் மேற்கொண்ட நிலையில் அங்கு இந்தியாவில் உள்ள சூழல் குறித்து விமர்சனம் செய்திருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பா.ஜ.க. அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் ராகுல் காந்தியை கடுமையாக சாடினர்.

ராகுல் காந்தியை இந்தியாவின் முதன்மையான பயங்கரவாதி என்றும் அவரின் நாக்கை அறுத்து வருபவருக்கு பரிசுத் தொகை அளிப்பதாக அறிவிக்கும் அளவுக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக பேசியிருத்தனர்.

இந்நிலையில் இதை கண்டித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதுதொடர்பாக அந்த கடிதத்தில், "நமது நாட்டின் ஜனநாயகத்துக்கும், அரசியலமைப்புக்கும் ஏற்பட்டுள்ள நேரடி பிரச்சனையை உங்களின் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். சமீபத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி மீது கூறப்பட்ட ஆட்சேபனைக்குரிய வன்முறையான கருத்துக்கள் கூறப்பட்டது உங்களின் கவனத்துக்கு வந்திருக்கும். மத்திய ரெயில்வே இணை மந்திரி [ரவ்நீத் பிட்டு], உத்தரப்பிரதேசம் பா.ஜ.க. அமைச்சர் [ரகுராஜ் சிங்], ஆகியோர் ராகுல் காந்தியை நம்பர் 1 பயங்கரவாதி என்று கூறியுள்ளனர்.

உங்களின் கட்சியை சேர்ந்த மராட்டிய எம்.எல்.ஏ. ராகுல் காந்தியின் நாக்கை அறுத்து வருபவருக்கு ரூ.11 லட்சம் பரிசுத் தொகை அறிவித்துள்ளார். டெல்லி பா.ஜ.க. முன்னாள் எம்.எல்.ஏ, ராகுலின் பாட்டிக்கு ஏற்பட்ட விதிதான் ராகுலுக்கு ஏற்படும் என்று மிரட்டியுள்ளார்.

உலகத்துக்கு அகிம்சையையும், அன்பையும் போதிக்கும் இந்தியாவில் பொது வாழ்க்கையில் இருப்பவர்கள் எப்படி கண்ணியத்துடன் இருக்க வேண்டும் என்று காந்தி உள்ளிட்ட தலைவர்கள் உதாரணமாக விளங்கினர். இந்திய அரசியலில் இப்படிப்பட்ட வன்மம் பரவுவதைக் கண்டு மகாத்மா காந்தி, இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி ஆகியோர் தங்களைத் தாங்களே தியாகம் செய்து கொண்டார்களா..?

ஆளுங்கட்சி எதிர்க்கட்சி இடையே உள்ள பிரச்சனைகள் ஆரோக்கியமான முறையில் தீர்வு காணப்பட வேண்டும். ஆனால் தற்போது பா.ஜ.க. தலைவர்கள் பரப்பி வரும் வெறுப்பு நாட்டுக்கு இழுக்கை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற கருத்துக்களை வெளியிட்ட பா.ஜ.க. தலைவர்கள் மீது நீங்கள் கடுமையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் . வருங்காலங்களில் உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இதுபோன்று பேசாமல் இருக்க அவர்களுக்கு மரியாதையையும் ஒழுக்கத்தையும் கற்றுக்கொடுங்கள்" என்று அதில் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்