திருவனந்தபுரம் - காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு

திருவனந்தபுரம்-காசர்கோடு வந்தே பாரத் ரெயிலில் பெட்டிகளின் எண்ணிக்கையை உயர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2025-01-03 16:30 GMT

திருவனந்தபுரம்,

கேரளாவில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே வந்ேத பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் மற்ற ரெயில்களை விட விரைவாக செல்வதால், இதில் பயணம் செய்ய பயணிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்த ரெயிலில் 16 பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், பயணிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதுடன், பலர் பயணிக்க டிக்கெட் கிடைக்காமல் போகிறது.

இந்தநிலையில் திருவனந்தபுரம்-காசர்கோடு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலில் கூடுதலாக 4 பெட்டிகள் என மொத்தம் 20 பெட்டிகளை இணைக்க தென்னக ரெயில்வே நிர்வாகம் முடிவு செய்து உள்ளது. ஏற்கனவே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயிலுக்கு பதிலாக, 20 ரெயில் பெட்டிகளை கொண்ட ரெயில் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. தற்போது சென்னையில் ரெயில் பெட்டிகள் தயாரிக்கப்படும் இடத்தில் புதிய பெட்டிகள் உள்ளது.

அதனுடன் ரெயில் கொண்டு வரப்பட்டு திருவனந்தபுரம்-காசர்கோடு வழித்தடத்தில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் 20 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட இருக்கிறது. இருப்பினும், 16 பெட்டிகள் கொண்ட வந்தே பாரத் ரெயில் கேரளாவில் இருந்து திரும்ப பெறப்பட மாட்டாது. இந்த ரெயில் கேரளாவில் உள்ள வேறு வழித்தடத்தில் இயக்கப்பட உள்ளது என்று மத்திய ரெயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

மேலும் திருவனந்தபுரம்-ஆலப்புழா வழியாக மங்களூரு வரை செல்லும் வந்தே பாரத் ரெயிலில் 8 பெட்டிகள் மட்டுமே உள்ள நிலையில், அந்த ரெயில் 16 பெட்டிகள் உள்ள ரெயிலாக மாற்ற வாய்ப்பு உள்ளது. திருவனந்தபுரம்-காசர்கோடு, திருவனந்தபுரம்-பெங்களூரு இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரெயில்கள் முன்பதிவு மூலம் அனைத்து இருக்கைகளிலும் நிரம்பி இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்