'அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ், பா.ஜ.க. பயன்படுத்துகின்றன' - மாயாவதி
அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ், பா.ஜ.க. பயன்படுத்தி வருவதாக மாயாவதி விமர்சித்துள்ளார்.
லக்னோ,
நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா சர்ச்சையாக பேசியதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், அரசியல் ஆதாயத்திற்காக அம்பேத்கரின் பெயரை காங்கிரஸ் மற்றும் பா.ஜ.க. ஆகிய கட்சிகள் பயன்படுத்தி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி விமர்சித்துள்ளார். இது தொடர்பாக 'எக்ஸ்' தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது;-
"பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கரின் பெயரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுவதற்கு பதிலாக, காங்கிரஸ், பா.ஜ.க. ஆகிய கட்சிகள் அவரை முழுமையாக மதிக்க வேண்டும். இந்த கட்சிகள் எந்த கடவுளை வழிபட்டாலும் அதில் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆட்சேபனை இல்லை. ஆனால் தலித்துகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு அம்பேத்கர்தான் ஒரே கடவுள். இந்த வகுப்பினருக்கு அம்பேத்கரால்தான் அரசியலமைப்பு உரிமைகள் கிடைத்தன. அது ஏழு பிறவிகளுக்கு பின் கிடைக்கும் சொர்க்கத்திற்கு இணையானது.
காங்கிரஸ், பா.ஜ.க. போன்ற கட்சிகள் தலித்துகள் மற்றும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் மீது அன்பு செலுத்துவது சுத்தமான ஏமாற்று வேலை. இந்த சமூகங்களுக்கு அவர்களின் ஆட்சியில் உண்மையான நலன் கிடைப்பது என்பது சாத்தியமற்றது. அவர்களின் பணி மேலோட்டமாக உள்ளது. ஒடுக்கப்பட்ட மக்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு பகுஜன் சமாஜ் கட்சியின் ஆட்சியில்தான் சரியான மரியாதை அளிக்கப்பட்டது."
இவ்வாறு மாயாவதி தெரிவித்துள்ளார்.