காஷ்மீர் துணைநிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கிய மத்திய அரசு: எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்
காஷ்மீரில் போலீஸ், சிவில் சர்வீஸ் அதிகாரிகள் தொடர்பான முடிவுகள் எடுக்க துணைநிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரத்தை மத்திய அரசு வழங்கி உள்ளது.;
புதுடெல்லி,
ஒன்றுபட்ட காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ம் ஆண்டு விலக்கப்பட்டு அந்த மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. இதில் லடாக் யூனியன் பிரதேசத்துக்கு சட்டசபை இல்லாத நிலையில், சட்டசபை கொண்டிருக்கும் காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் காஷ்மீரில் போலீஸ், சட்டம்-ஒழுங்கு, ஐ.ஏ.எஸ்-ஐ.பி.எஸ். உள்ளிட்ட சிவில் சர்வீஸ் அதிகாரிகள் நியமனம் மற்றும் இடமாற்றம் உள்ளிட்ட பல்வேறு நிர்வாகம் சார்ந்த முடிவுகள் எடுக்க துணை நிலை கவர்னருக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி இருக்கிறது. மேலும் மாநில அரசு வக்கீல், சட்ட அதிகாரிகள் நியமனம், ஊழல் தடுப்பு பிரிவு தொடர்பான விவகாரங்களில் முடிவுகளை எடுக்கவும் துணைநிலை கவர்னருக்கு அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக காஷ்மீர் மறுசீரமைப்பு சட்டம் 2019ல் திருத்தங்களை செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு காஷ்மீர் அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
இதுதொடர்பாக காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் விகார் ரசூல் தனது எக்ஸ் வலைதளத்தில், 'காஷ்மீரில் சரியான ஜனநாயக நடைமுறை மற்றும் மாநில அந்தஸ்து வழங்குவதற்கு முன்னரே ஜனநாயக படுகொலை செய்யப்பட்டிருப்பது தெளிவாகிறது. போலீஸ், சட்டம்-ஒழுங்கு, அதிகாரிகள் பணியிடமாற்றம் உள்ளிட்டவற்றில் அதிக அதிகாரம் துணைநிலை கவர்னருக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது' என குறிப்பிட்டு உள்ளார்.
இதைப்போல மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம் காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மத்திய அரசு உடனடியாக வழங்காது என்பது தெளிவாவதாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.
முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாடு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா கூறுகையில், 'மத்திய அரசின் இந்த நடவடிக்கை மூலம் காஷ்மீரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் முதல்-மந்திரி, ஒரு உதவியாளரை நியமிக்கக்கூட துணைநிலை கவர்னரை கெஞ்ச வேண்டும். அதிகாரமற்ற, ரப்பர் ஸ்டாம்ப் முதல்-அமைச்சரை விட காஷ்மீர் மக்கள் தகுதியானவர்கள்' என சாடியுள்ளார்.
மக்கள் ஜனநாயக கட்சி தலைவரும், மற்றொரு முன்னாள் முதல்-மந்திரியுமான மெகபூபாவின் மகளும், ஊடக ஆலோசகருமான இல்திஜா முப்தி தனது எக்ஸ் தளத்தில், 'காஷ்மீரில் தேர்தல் நடத்த இந்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில், இங்கு பா.ஜனதா அல்லாத அரசு அமையும் என மத்திய அரசுக்கு தெரிந்து இருக்கிறது. இதனால்தான் மக்களால் தேர்வு செய்யப்படாத துணைநிலை கவர்னருக்கு அதிக அதிகாரங்களை வழங்கி அவர் மூலம் காஷ்மீரை ஆள அரசு நினைக்கிறது' என குற்றம் சாட்டியுள்ளார்.