மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து கடலூர், புதுச்சேரியில் இன்று மத்தியக்குழு ஆய்வு

'பெஞ்சல்' புயல் பாதித்த இடங்களை மத்தியக்குழுவினர் நேரில் பார்வையிட்டு சேத விவரங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

Update: 2024-12-08 02:48 GMT

புதுச்சேரி,

வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட மத்திய உள்துறை அமைச்சகத்தின் பேரிடர் மேலாண்மை இணைச்செயலாளர் ராஜேஷ்குப்தா தலைமையில் ஒரு குழு தமிழ்நாடு வந்துள்ளது.

முன்னதாக பெஞ்சல் புயலினால் விழுப்புரம் மாவட்டத்தில் 240 கிராமங்களும், விழுப்புரம் நகரப்பகுதிகளும் பாதிப்படைந்தன. விளை நிலங்களை பொறுத்தவரை மாவட்டத்தில் ஒரு லட்சத்து 9 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் 80 ஆயிரத்து 560 ஹெக்டேர் பாதிப்படைந்தன. மாவட்டம் முழுவதும் 75 சதவிகிதம் விவசாய நிலங்கள் பாதிப்படைந்தன. அதில் நெல் 58 ஆயிரம் ஹெக்டரும் உளுந்து 13 ஆயிரம் ஹெக்டரும், மணிலா 6 ஆயிரம் ஹெக்டர், கரும்பு 3 ஆயிரம் ஹெக்டர் மக்காசோளம் 150 ஹெக்டர் பருத்து 59 ஹெக்டர் பாதிப்படைந்தன.

புயல் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய விழுப்புரத்திற்கு 7 பேர் கொண்ட குழுவினர் இரு குழுக்களாக பிரிந்து ஆய்வு செய்தனர். மத்திய உள் துறை அமைச்சக பேரிடர் மேலாண்மை இணை செயலாளர் ராஜேஷ் குப்தா தலைமையிலான ஒரு குழுவினர் அரசூர், இருவேல்பட்டு, திருவென்ணைய் நல்லூர், சிறுமதுரை திருக்கோவிலூர் பகுதிகளில் ஆய்வு செய்தனர். அதேபோன்று மத்திய விவசாய மற்றும் உழவர் நலத்துறை இயக்குனர் பொன்னுசாமி தலைமையில் மற்றொரு குழுவினர் வைலாமூர், கருங்காலிப்பட்டு, சென்னாகுனம், அரகண்டநல்லூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின் போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட விளை நிலங்கள் உள்ள பகுதியில் இறங்கி பயிர் சேதம் குறித்தும், தென்பெண்ணையாற்ற்றின் கரையோர பகுதி பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு மீட்கபட்டவர்களிடம் வெள்ளபாதிப்பு குறித்து கேட்டறிந்தனர்.

இதனிடையே மாவட்டத்தில் புயல் மழையால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு சார்பில் தலா ரூ.5 லட்சம் நிவாரண உதவி வழங்கப்பட்டுள்ளது. இதுதவிர புயலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் அரசின் சார்பில் ரூ.2 ஆயிரம் நிவாரணத்தொகை மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் மத்தியக்குழுவினர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு கடலூர், பண்ருட்டி தாலுகாவில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளையும், புதுச்சேரி மாநிலத்தில் புயலால் பாதிக்கப்பட்ட இடங்களையும் ஆய்வு செய்கின்றனர். அதன்பிறகு கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புயல் வெள்ள சேதங்கள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் மத்தியக்குழுவினர் ஆய்வுக்கூட்டம் நடத்துகிறார்கள்.

இந்த ஆய்வு முடிந்ததும் புயலால் ஏற்பட்டபாதிப்புகளின் விவரங்களை மத்தியக்குழுவினர் சேகரித்து அதனை அறிக்கையாக தயார் செய்து  மத்திய அரசுக்கு அனுப்ப உள்ளனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையை பொறுத்து தமிழகத்திற்கு தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசு ஒதுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்