காவிரி நீரை சிக்கனமாக செலவிட வேண்டும்; தமிழகத்திற்கு காவிரி ஒழுங்காற்று குழு அறிவுறுத்தல்
டெல்லியில் காவிரி ஒழுங்காற்று குழு கூட்டம் நேற்று நடைபெற்றது.;
புதுடெல்லி,
காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 107-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. காணொலி வாயிலாக நடந்த இந்த கூட்டத்தில் பங்கேற்ற தமிழக அதிகாரிகள், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி கர்நாடகம், தமிழகத்துக்கு தர வேண்டிய தண்ணீரை தவறாது வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
அதன்படி நவம்பர் மாதத்துக்கு 13.78 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட வேண்டும், அதனை உரிய காலத்தில் வழங்குமாறும் கேட்டுக்கொண்டனர். இதற்கு பதில் தெரிவித்த கர்நாடக அதிகாரிகள், 13.78 டி.எம்.சி. தண்ணீரில் 9.58 டி.எம்.சி. தண்ணீர் வழங்கப்பட்டு விட்டதாகவும், எஞ்சிய நீரை வழங்கி விடுவதாகவும் கூறினர்.
இதனைத் தொடர்ந்து தமிழக அதிகாரிகளிடம் பேசிய ஒழுங்காற்றுக்குழு தலைவர், காவிரி மூலம் கிடைக்கும் தண்ணீரின் அளவு ஒவ்வொரு மாதமும் மாறுபடுவதால் நீரை சிக்கனமாக செலவிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதைப்போல கர்நாடகம், கேரளா மற்றும் புதுச்சேரி மாநில அதிகாரிகளிடமும் தண்ணீர் சிக்கன கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.