ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு திட்டங்களை அறிவித்த மத்திய அரசுக்கு நன்றி - சந்திரபாபு நாயுடு

மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது என்று ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.;

Update: 2024-07-23 12:01 GMT

ஐதராபாத்,

2024-25 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மக்களவையில் இன்று காலை மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் பீகார், ஒடிசா, ஜார்கண்ட், ஆந்திரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களின் வளர்ச்சிக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றார்.

மேலும் ஆந்திரா தலைநகர் அமராவதியின் வளர்ச்சிக்காக ரூ.15 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் தேவைக்கு ஏற்ப கூடுதல் நிதி அமராவதிக்கு வழங்கப்படும் என்றும் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். மேலும் ஆந்திரப் பிரதேசப் பிரிவினைச் சட்டத்தின்படி மின்சாரம், சாலை, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் மத்திய பட்ஜெட்டில் உறுதி அளிக்கப்பட்டது.

போலவரம் திட்டம் நிறைவேற்றப்படும் என்றும், ஆந்திராவின் பின்தங்கிய பகுதிகளுக்கு வளர்ச்சிக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் விசாகப்பட்டினம் - சென்னை, ஐதராபாத்-பெங்களூரு இடையே அமைக்கப்படும் தொழில் வழித்தடங்களுக்கு நிதி ஒதுக்கப்படும் என்றும் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். ஆந்திர மாநிலத்திற்கான அறிவிப்புகள் அம்மாநில மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் ஆந்திர பிரதேச முதல்-மந்திரியும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "எங்கள் மாநிலத்தின் தேவைகளை அங்கீகரித்த பிரதமர் நரேந்திர மோடி, மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் அவர்களுக்கு ஆந்திர மக்களின் சார்பாக நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் அமராவதி, போலவரம், தொழில்துறை மையங்கள், ஆந்திராவில் பின்தங்கிய பகுதிகளின் மேம்பாடு ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது. மத்திய அரசின் இந்த ஆதரவு ஆந்திராவை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு நீண்ட தூரம் செல்லும். மாநிலத்தின் தேவைகளை உணர்ந்து பல்வேறு திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

இந்த முற்போக்கான நம்பிக்கையை அதிகரிக்கும் பட்ஜெட்டை தாக்கல் செய்ததற்கு நான் உங்களை வாழ்த்துகிறேன்" என்று அவர் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடுவின் மகனும், மந்திரியுமான நாரா லோகேஷ் தன்னுடைய எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், "மத்திய அரசுக்கு நன்றி, இந்த பட்ஜெட் மாநிலத்திற்கு புதிய உதயம்" என்றும் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்