பிளாக் பிரைடே சேல்ஸ்.. கவர்ச்சிகரமான தள்ளுபடியில் பொருட்கள் விற்பனை
கடந்த ஆண்டைப் போலவே பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியாவில் பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனை நடைபெறுவதுபோன்று, அமெரிக்காவில் 'பிளாக் பிரைடே சேல்ஸ்' எனப்படும் கருப்பு வெள்ளி தள்ளுபடி விற்பனை மிக பிரபலம். அதாவது, அமெரிக்காவில் ஆண்டுதோறும் ஒரு வியாழக்கிழமையன்று நடைபெறும் தேங்க்ஸ் கிவ்விங் என்ற சம்பிரதாய பண்டிகைக்கு அடுத்த நாள், கருப்பு வெள்ளிக்கிழமை வருகிறது. இதையொட்டி சில நாட்கள் தள்ளுபடி விற்பனை நடைபெறும். கிறிஸ்துமஸ் பண்டிகை, புத்தாண்டை குறிவைத்து பெரும் வணிக நிறுவனங்கள், பிளாக் பிரைடே தள்ளுபடி விற்பனையில் கல்லா கட்டுகின்றன.
அமெரிக்காவில் மட்டுமே இருந்த இந்த வியாபார யுக்தி கடந்த சில ஆண்டுகளாக உலக அளவிலான வர்த்தக திருவிழாவாக மாறிவிட்டது. இந்தியாவிலும் இந்த தள்ளுபடி விற்பனைக்கு ஆதரவு பெருகி வருகிறது.
இந்த ஆண்டு நவம்பர் 29-ம் தேதி பிளாக் பிரைடே சேல்ஸ் நடைபெற உள்ளது. இன்னும் சில தினங்கள் உள்ள நிலையில், வர்த்தக நிறுவனங்கள் நம்ப முடியாத விலையில் பொருட்களை விற்பனை செய்ய தயாராகி வருகின்றன.
கடந்த ஆண்டைப் போலவே பிரபலமான இ-காமர்ஸ் தளங்கள் கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எலக்ட்ரானிக்ஸ், ஸ்மாட்போன்கள் உள்ளிட்ட புதுவரவு கேஜெட்டுகள், நவநாகரீக பேஷன் ஆடைகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என எண்ணற்ற பொருட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
ஒரு வாரம் முதல் பத்து நாட்கள் வரை இந்த தளங்களில் தள்ளுபடி விற்பனை நடைபெறும். பொருட்கள் கையிருப்பு விரைவில் தீர்ந்துவிடும் என்பதால் முன்கூட்டியே ஆர்டர் செய்தால் ஏமாற்றத்தை தவிர்க்கலாம்.
அமேசான் தளத்தில் இந்த தள்ளுபடி விற்பனை இன்றே தொடங்கிவிட்டது. சில கவர்ச்சியான சலுகைகளையும் அறிவித்துள்ளது. எக்கோ பாப், எக்கோ டாட் (ஐந்தாம் தலைமுறை), பயர் டிவி போன்ற அமேசான் சாதனங்களில் 55 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. பீட்ஸ் ஹெட்போன்கள் மற்றும் இயர்பட்ஸ்களுக்கு 50 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. எச்பி, லெனோவா மற்றும் ஏசர் லேப்டாப்களில் 45 சதவீதம் வரை தள்ளுபடி வழங்குகிறது. சாம்சங் கேலக்சி பட்சை பொருத்தவரை 40 சதவீதம் வரை தள்ளுபடியில் விற்பனை செய்கிறது.
டாடா கிளிக்கில் நவம்பர் 26-ம் தேதி தொடங்கி 30-ம் தேதிவரை விற்பனை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பொருட்களுக்கான தள்ளுபடி குறித்த தகவலையும் வெளியிட்டிருக்கிறது. மிந்த்ரா, பிளிப்கார்ட், மினிசோ போன்ற பிற பிரபலமான தளங்கள், தள்ளுபடி விற்பனை தேதிகளை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.