வங்காளதேசம், ரோஹிங்கியாக்களின் ஊடுருவலால் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு பெரும் அச்சுறுத்தல் - பிரதமர் மோடி

காங்கிரஸ் ஊழல் பள்ளியில் ஜார்க்கண்ட் அரசும் பயிற்சி எடுத்துள்ளதாக பிரதமர் மோடி கூறியுள்ளார்.

Update: 2024-09-15 10:56 GMT

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநில சட்டசபை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதனையடுத்து ஜார்க்கண்ட் மாநிலத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நலத் திட்டங்களை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி. பிரதமர் மோடி ஜாம்ஷெட்பூரில் ரோடு ஷோ நடத்த திட்டமிட்டிருந்தார். ஆனால் மழை மற்றும் வானிலை காரணமாக இந்த ரோடு ஷோ நடைபெறவில்லை. அத்துடன் ராஞ்சியில் இருந்து தரைமார்க்கமாகவே காரில் ஜாம்ஷெட்பூர் சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது:

சந்தால் பர்கானாவில் பழங்குடிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. பழங்குடிகளின் நிலங்கள் பறிபோகின்றன. பஞ்சாயத்துகளில் ஊடுருவல்காரர்கள் ஆதிக்கம் தலைதூக்கி இருக்கிறது. இதனால்தான் நமது பெண்களுக்கு எதிரான வன்முறைகளும் அதிகமாகி இருக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஊடுருவல்காரர்கள் அதிகரித்திருப்பதால் ஒவ்வொரு குடிமகனும் அச்சத்தில் இருக்கின்றனர்.

வங்காள தேச முஸ்லிம்கள் மற்றும் ரோஹிங்கியா முஸ்லிம்களை ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா ஆதரிக்கிறது. இந்த ஊடுருவல்காரர்களும் பயங்கரவாதிகளும்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றனர். மதத்தின் அடிப்படையில் வாக்கு வங்கியை தக்க வைக்கின்றனர்.

சம்பாய் சோரன், ஏழை ஆதிவாசி வீட்டில் பிறந்தவர். அவரிடம் இருந்து முதல்-மந்திரி பதவியை பறித்து அவமதித்து விட்டது ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா. அதேபோல சிபுசோரன் குடும்பத்தாலேயே சீதா சோரன் அவமதிக்கப்பட்டுள்ளார். இதற்கு எல்லாம் சட்டசபை தேர்தலில் மக்கள் தக்க பாடம் தருவார்கள். இந்த நாட்டிலேயே மிக மோசமான ஊழல் கட்சி என்றால் அது காங்கிரஸ்தான். இந்த நாட்டிலேயே மிக மோசமான ஊழல் குடும்பம் எது என்றால் அது காங்கிரஸ் குடும்பம்தான். காங்கிரஸ் கற்றுக் கொண்ட பள்ளியில்தான் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சாவும் பயிற்சி எடுத்திருக்கிறது. அந்த பள்ளியின் பெயர் காங்கிரஸ் ஸ்கூல் ஆப் கரப்சன்.

ஜார்க்கண்ட்டில் வாக்கு வங்கி அரசியலில் காங்கிரஸ் - ஜேஎம்எம் கூட்டணி ஈடுபட்டுள்ளது. சுரங்க ஊழல், கனிமவள ஊழல், ராணுவத்துக்கு சொந்தமான இடங்களில் ஊழல் என அடுக்கடுக்கான ஊழல்களில் ஈடுபட்டுள்ள ஜேஎம்எம்-க்கு விடைகொடுக்க வேண்டிய நேரமிது.

பாஜக ஆட்சிக்கு வந்தால், ஜார்க்கண்ட்டில் காவலர் தேர்வில் இளம் தேர்வர்கள் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவத்தில் முறையான விசாரணை நடத்தப்படும். ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணி அரசு, பொய் வழக்குகளைப் பதிவு செய்து பாஜக தலைவர்களை குறிவைக்கிறது. ஜார்க்கண்ட்டில் அரசின் தயவில் சில கும்பல்கள் அரசு வேலைகளை வியாபாரமாக்கி வருகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்