அசாம் வெள்ளம்: பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் ராகுல் காந்தி
அசாமை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார்.
கவுகாத்தி,
அசாமில் வெளுத்து வாங்கிய மழையால் மாநிலத்தில் 28 மாவட்டங்கள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளை வெள்ளம் சூழ்ந்ததால் 22 லட்சத்து 74 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மழைக்கு ஏற்கனவே 70 பேர் பலியான நிலையில், நேற்று மேலும் 8 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது.
269 நிவாரண முகாம்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டு உள்ளனர். பிரம்மபுத்ரா நதியில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அபாய அளவை தாண்டி நீர் ஓடுவதால் கரையோர மக்களுக்கு மீண்டும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மற்ற நதிகளிலும் வெள்ளப்பெருக்கால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில், அசாம் மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திப்பதற்காக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று விமானம் மூலம் சில்சார் விமான நிலையம் வந்தடைந்தார். அவரை காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் வரவேற்றனர். பின்னர் லத்திபூர் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியிருக்கும் மக்களை ராகுல் காந்தி நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து, அம்மாநில அரசியல் தலைவர்களை சந்தித்துப் பேசும் ராகுல் காந்தி, மாநில கவர்னர் அனுஷ்யா உய்கேவை சந்தித்துப் பேசவுள்ளார்.
அசாமை தொடர்ந்து வன்முறையால் பாதிக்கப்பட்டிருக்கும் மணிப்பூர் மக்களை ராகுல் காந்தி சந்திக்கவுள்ளார். ராகுல் காந்தி மூன்றாவது முறையாக மணிப்பூர் செல்ல உள்ளது குறிப்பிடத்தக்கது. ராகுல் காந்தி வருகையையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.