பெட்ரோலுக்கு பணம் தராமல் சென்ற போலீஸ்காரர்... தட்டிக்கேட்ட ஊழியரை காரில் இழுத்துச்சென்ற அவலம்

காரை ஏற்றி ஊழியரை கொல்ல முயன்றதாக போலீஸ்காரர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

Update: 2024-07-17 06:30 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் கண்ணூர் அருகே தளாப் பகுதியில் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இங்கு அணில் (வயது 26) என்பவர் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்தநிலையில் கண்ணூர் ஆயுதப்படை போலீஸ்காரரான சந்தோஷ் குமார் (38) என்பவர் காருக்கு பெட்ரோல் நிரப்ப அங்கு வந்தார்.

அப்போது அவர் ரூ.2,100-க்கு பெட்ரோல் நிரப்புமாறு அணிலிடம் கூறினார். தொடர்ந்து அவரது காருக்கு ரூ.2,100-க்கு பெட்ரோல் நிரப்பினார். அதன் பின்னர் சந்தோஷ் குமார் பெட்ரோல் நிரப்பியதற்கு பணம் தராமல், அங்கிருந்து காரை ஓட்டி செல்ல முயன்றார். உடனே அணில், காரை வழிமறித்து பணம் கேட்டு உள்ளார். அந்த சமயத்தில் காரின் முன்பு அவர் நின்றிருந்தார்.

ஆனால், அதை பொருட்படுத்தாமல் சந்தோஷ்குமார் அணில் மீது காரை ஏற்றினார். பின்னர் 600 மீட்டர் தூரம் போலீஸ்காரர் காரை ஓட்டி சென்றார். அப்போது காரின் முன்பகுதியில் அணில் அபாயகரமான நிலையில் தொங்கிய படி இருந்தார். இந்த காட்சியை சிலர் தங்களது செல்போனில் வீடியோ பதிவு செய்தனர். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலானது.

இதையடுத்து போலீஸ் ஐ.ஜி. சுனில்குமார், சம்பவம் குறித்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டார். இதில் சந்தோஷ்குமார் பெட்ரோல் விற்பனை நிலைய ஊழியரிடம் மோசடி செய்ததும், ஊழியர் மீது காரை ஏற்றி கொல்ல முயன்றதும் தெரியவந்தது. இதுதொடர்பாக சந்தோஷ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து, அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் போலீஸ்காரர் சந்தோஷ்குமாரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்