செயற்கை நுண்ணறிவால் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தல்.. ரிசர்வ் வங்கி கவர்னர் எச்சரிக்கை

செயற்கை நுண்ணறிவு அமைப்புகளில் கோளாறுகள் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் அது நிதித் துறை முழுவதும் பரவக்கூடும் என சக்திகாந்த தாஸ் கூறினார்.

Update: 2024-10-14 11:03 GMT

புதுடெல்லி:

டெல்லியில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் பயன்பாடு அதிகரித்து வருவதால் ஏற்படும் தாக்கம் குறித்து அவர் பேசியதாவது:-

உலக அளவில் நிதிச் சேவைகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் எந்திரக் கற்றல் ஆகியவற்றின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. இது எதிர்காலத்தில் நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக அமையலாம். அதாவது, செயற்கை நுண்ணறிவு மீதான அதிக நம்பிக்கையானது, குறிப்பிடத்தக்க இழப்புகளை ஏற்படுத்த வழிவகுக்கும். குறிப்பாக, குறைந்த எண்ணிக்கையிலான தொழில்நுட்ப வழங்குநர்கள் சந்தையில் ஆதிக்கம் செலுத்தும்போது இழப்பு அதிகமாகும்.

இந்த அமைப்புகளில் கோளாறுகள் அல்லது ஏதாவது இடையூறுகள் ஏற்பட்டால் அது நிதித் துறை முழுவதும் பரவக்கூடும். இதனால் அமைப்பு ரீதியான ஆபத்துகள் அதிகரிக்கும்.

இந்தியாவின் நிதி சேவை வழங்குநர்கள் வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்தவும், செலவுகளைக் குறைக்கவும், சந்தை அபாயங்களை நிர்வகிக்கவும், சாட்போட்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட வங்கி மூலம் வளர்ச்சியை அதிகரிக்கவும் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகின்றனர்.

செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு அதிகரிப்பதால், சைபர் தாக்குதல்கள் மற்றும் தரவு மீறல்களுக்கான சாத்தியங்கள் அதிகரிக்கும்.

செயற்கை நுண்ணறிவு எவ்வாறு செயல்படுகிறது, அதன் முடிவுகள் எப்படி இருக்கும்? என்பதை புரிந்துகொள்வது சிரமம். இந்த சிரமமான நிலையானது, கடன் வழங்குநரின் முடிவுகளை இயக்கும் அல்காரிதம்களை தணிக்கை செய்வதையும் விளக்குவதையும் கடினமாக்குகிறது. மேலும், சந்தையில் கணிக்க முடியாத விளைவுகளுக்கு வழிவகுக்கும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்