டெல்லியில் காற்றுமாசு: மந்திரி கோபால் ராய் ஆலோசனை
காற்று மாசுபாடு, பனி மூலம் டெல்லியில் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
புதுடெல்லி,
டெல்லியில் கடந்த சில நாட்களாக காற்று மாசு அதிகரித்து வந்த வண்ணம் உள்ளது. இதற்கிடையே, டெல்லியில் காற்று தரக்குறியீடு இன்று 432 ஆக பதிவாகியுள்ளது. காற்றின் தரம் கடுமையான பிரிவில் இருந்ததால், பல்வேறு பகுதியில் இன்று அடர்ந்த மூடுபனி நிலவியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர். இதேபோல டெல்லியின் ஆனந்த் விஹார் பகுதியில் காற்று தரக்குறியீடு 473 என்ற கடுமையான பிரிவில் பதிவானது. காற்று மாசுபாடு, பனி மூலம் ஏற்கெனவே டெல்லியில் ஏராளமான மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், டெல்லியின் காற்றுமாசுபாடு தொடர்பாக சுற்றுச்சூழல் மந்திரி கோபால் ராய் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். டெல்லி தலைமைச் செயலகத்தில் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் மந்திரி ஆய்வு மேற்கொண்டுள்ளார்.
காற்று மாசை கட்டுப்படுத்த நிலை 3 கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து மந்திரி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. நிலை 3 கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டால் மின்சார வாகனங்கள் தவிர பிற மாநில பஸ்கள் டெல்லியில் நுழைய தடை விதிக்கப்படும். மேலும் கட்டுமான இடிப்பு, சுரங்கப் பணிகளுக்கும் தடை விதிக்கப்படும். அதேபோல 5ஆம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகளாக மாற்றுவது குறித்தும் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.