விமானத்தில் பயணிக்கு வழங்கப்பட்ட உணவில் பிளேடு.. ஏர் இந்தியா விளக்கம்

பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருவதாக ஏர் இந்தியா அதிகாரி தெரிவித்துள்ளார்.;

Update: 2024-06-17 10:17 GMT

புதுடெல்லி:

பெங்களூருவிலிருந்து கடந்த 9-ம் தேதி சான்பிரான்சிஸ்கோ சென்ற ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த மதுரஸ் பால் என்ற பத்திரிகையாளர், தனக்கு விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததாக சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். 

விமானத்தில் தனக்கு நேர்ந்த அனுபவம் குறித்து அவர் கூறியிருப்பதாவது:-

ஏர் இந்தியா விமானத்தில் வழங்கப்பட்ட அத்திப்பழ சாட் உணவில் பிளேடு கிடந்தது. கவனிக்காமல் வாயில் போட்டு இரண்டு அல்லது மூன்று வினாடிகள் மென்று சாப்பிட்டபிறகே, அது உணவில் இருப்பதை உணர்ந்தேன். துப்பியபோது அது பிளேடு என்பது தெரியவந்தது. இதற்காக விமான பணிப்பெண் மன்னிப்புக் கேட்டதுடன், கொண்டைக்கடலை வழங்கினார்.

எந்த விமானத்தில் வழங்கப்படும் உணவில் பிளேடு இருந்தாலும் அது ஆபத்துதான். சாப்பிட்டால் நாக்கை வெட்டிவிடும். இத்தகைய உணவை ஒரு குழந்தை சாப்பிட்டால் என்ன ஆகும்?

இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியிருந்தார்.

நடந்த சம்பவத்தை ஏர் இந்தியா நிறுவனம் ஒப்புக்கொண்டது. விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் பிளேடு கிடந்ததை தலைமை வாடிக்கையாளர் அனுபவ அதிகாரி ராஜேஷ் டோக்ரா உறுதி செய்தார்.

அவர் கூறுகையில், "உணவில் கிடந்த பொருள், எங்கள் சமையல் பார்ட்னர், காய்கறிகளை வெட்டுவதற்கு பயன்படுத்தும் இயந்திரத்தின் பாகம் என்பது தெரியவந்துள்ளது. இனி இதுபோன்று நடப்பதை தவிர்க்கும் வகையில் பாதுகாப்பான நடைமுறைகளை பின்பற்றுவது தொடர்பாக கேட்டரிங் பார்ட்னருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம். குறிப்பாக கடினமான காய்கறிகளை நறுக்கிய பிறகு இயந்திரத்தை அடிக்கடி சோதனை செய்யவேண்டும்" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்