நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு கட்டுப்பாடுகள்: "எதேச்சதிகார செயல்.." - மம்தா பானர்ஜி கண்டனம்

செய்தியாளர்களுக்கு எதிரான இந்த சர்வாதிகாரச் செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என்று மம்தா பானர்ஜி தெரிவித்தார்.

Update: 2024-07-29 15:43 GMT

கோப்புப்படம்

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மகர் துவார் நுழைவு வாயிலில் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் செய்தியாளர்கள் பேட்டி எடுப்பது வழக்கம். ஆனால், அப்பகுதியில் இன்று காலை செய்தியாளர்களுக்கு தடை விதிக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்ற வளாகத்தில் முன்பிருந்த பல்வேறு அனுமதிகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில், பல்வேறு நிறுவனங்களின் செய்தியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் செய்தியாளர்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் எதேச்சதிகார செயல் என திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவர் மம்தா பானர்ஜி கடுமையாக சாடியுள்ளார். மேலும் இந்த சர்வாதிகார செயலுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக மக்களவை எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி, சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் இந்த கட்டுப்பாட்டை தளர்த்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தார். அப்போது நாடாளுமன்ற விதிகள் பற்றி ராகுல் காந்திக்கு நினைவூட்டிய ஓம் பிர்லா, இதுபோன்ற பிரச்சனைகளை தன்னுடன் நேரில் விவாதிக்க வேண்டும் என்றும், அவையில் எழுப்பக்கூடாது என்றும் கூறினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. தெரிக் ஓ'பிரைன், "இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. இந்தப் போராட்டத்தில் நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்" என்று கூறினார்.

இதனையடுத்து லோக்சபா சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து, அவர்களின் அனைத்து குறைகளும் நிவர்த்தி செய்யப்படும் என்றும், அவர்களின் கடமைகளை நிறைவேற்ற சிறந்த வசதிகள் வழங்கப்படும் என்றும் உறுதியளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்