நாடாளுமன்ற வளாகத்தில் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் போராட்டம்
ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும், அரசியல் சாசனம் புறந்தள்ளப்படுவதாகவும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.;
புதுடெல்லி,
டெல்லி முதல்-மந்திரியும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கடந்த மார்ச் 21 ம் தேதி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்திய மக்களவைத் தேர்தல் நடந்த இடைப்பட்ட காலத்தில் பிரசாரம் செய்வதற்காக சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால ஜாமீன் பெற்று வெளியில் வந்த கெஜ்ரிவால் 21 நாட்கள் கழித்து இந்த மாத தொடக்கத்தில் மீண்டும் திகார் சிறைக்கு திரும்பினார்.
கெஜ்ரிவால் மீது சுமத்தப்பட்ட மற்றொரு குற்றச்சாட்டான கலால் கொள்கை முறைகேடு வழக்கு சம்பந்தமாக சிபிஐ அதிகாரிகள் கடந்த 3 நாட்களாக திகார் சிறையில் வைத்து கெஜ்ரிவாலிடம் விசாரணை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் இரவு திகார் சிறைக்கு சென்ற சிபிஐ அதிகாரிகள், அங்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் சிறிதுநேரம் விசாரணை நடத்தினர். அதன் பின்னர் அவரை கைது செய்தனர்.
இதையடுத்து அவர் நேற்று கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை முறைப்படி கைது செய்ய அனுமதி கோரி சிபிஐ சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதை ஏற்றுக்கொண்டு நீதிபதி அமிதாப் ரவத் அனுமதி அளித்தார். அதைத்தொடர்ந்து, அரவிந்த் கெஜ்ரிவாலை முறைப்படி சிபிஐ கைது செய்தது. மேலும் அரவிந்த் கெஜ்ரிவாலை 3 நாட்கள் சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அனுமதி அளித்தார்.
இந்நிலையில், அரவிந்த் கெஜ்ரிவாலை சிபிஐ கைது செய்ததை கண்டித்து ஆம் ஆத்மி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் இன்று நாடாளுமன்ற கூட்டு கூட்டத்தொடரில் ஜனாதிபதி திரவுபதி முர்முவின் உரையை புறக்கணிக்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சி தெரிவித்துள்ளது. ஜனநாயகம் படுகொலை செய்யப்படுவதாகவும், அரசியல் சாசனம் புறந்தள்ளப்படுவதாகவும் ஆம் ஆத்மி எம்.பி.க்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.