'50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும்' - ராகுல் காந்தி
50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும் என ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.;
வாஷிங்டன்,,
மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, 3 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ஆன பிறகு அவர் அமெரிக்கா செல்வது இதுவே முதல்முறை ஆகும். அங்கு வாஷிங்டனில் நடைபெற்ற பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"சாதி என்பது இந்தியாவில் ஒரு அடிப்படைப் பிரச்சினை. காங்கிரஸ் கட்சி, சுதந்திரத்திற்கு முன்பே, இந்தியா ஒரு நியாயமான நாடாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக போராடியது. இந்தியாவின் அனைத்து குடிமக்களும் ஒரே மாதிரியாக நடத்தப்பட வேண்டும் என்பதே எங்கள் கருத்து.
சாதிவாரி கணக்கெடுப்பை அடிப்படையாக கொண்டு ஒடுக்கப்பட்ட மக்களை சமூக அநீதிகளில் இருந்து வெளியே கொண்டு வருவதற்கான விரிவான திட்டங்களை வகுக்க முடியும். சமூகத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பற்றிய விரிவான புரிதல் ஏற்பட்ட பிறகு அதை சரிசெய்வதற்கான கொள்கைகளை அமல்படுத்த வேண்டும். அதில் ஒன்றுதான் இடஒதுக்கீடு ஆகும்.
நான் இடஒதுக்கீட்டிற்கு எதிரானவன் என்று யாரோ என்னைப் பற்றி தவறாக குறிப்பிட்டுள்ளனர். 50 சதவீத இடஒதுக்கீடு உச்சவரம்பு நீக்கப்பட வேண்டும். இடஒதுக்கீட்டை 50 சதவீதத்துக்கு மேல் அதிகரிக்க வேண்டும் என நான் பலமுறை கூறி வருகிறேன். நான் ஒருபோதும் இடஒதுக்கீட்டிற்கு எதிராக இருந்ததில்லை."
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.