ராஜஸ்தான்: மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழப்பு
ராஜஸ்தானில் மருந்து தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.
ஜெய்ப்பூர்,
ராஜஸ்தான் மாநிலம் கைர்தல்-திஜாரா மாவட்டத்தில் உள்ள மருந்து தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிவாடி பகுதியில் உள்ள மருந்து நிறுவனத்துக்கு சொந்தமான தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 4 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். முதலில் ஒருவர் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், தீயை அணைத்த பின்னர் 3 பேரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்த விபத்தில் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை. போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.