பெங்களூரு பெண் கொடூர கொலை: உத்தரகாண்ட் வாலிபரை போலீஸ் தேடுகிறது

பெங்களூருவில் பெண்ணை கொன்று உடலை 50 துண்டுகளாக கூறுபோட்ட வழக்கில் கொலையாளியை பிடிக்க 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.

Update: 2024-09-22 21:34 GMT

பெங்களூரு,

பெங்களூருவின் வயலிக்காவல் பகுதியில் உள்ள வீட்டில், 2 நாட்களாக மிகவும் துர்நாற்றம் வீசியுள்ளது. இதனையடுத்து அக்கம் பக்கத்தினர், அவ்வீட்டில் தங்கியிருந்த மகாலட்சுமியின் தாயாருக்கு தெரிவித்துள்ளனர். பின்னர் பெண்ணின் தாயாரும், சகோதரியும் அங்கு வந்துள்ளனர். வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பார்த்துள்ளனர். அப்போது, மகாலட்சுமியின் உடல் துண்டு, துண்டாக வெட்டப்பட்டு, பிரிட்ஜில் வைக்கப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

30 துண்டுகளாக உடல் வெட்டப்பட்டிருந்த நிலையில், அதில் புழுக்களும் இருந்துள்ளன. சம்பவ இடத்தில் நேரில் விசாரணை மேற்கொண்ட கூடுதல் காவல் ஆணையர், 10 நாட்களுக்கு முன்னர் கொலை நடந்திருக்கலாம் என தெரிவித்தார். மகாலட்சுமி, கணவர் ஹேமந்த் தாஸை விட்டு பிரிந்து தனியாக வசித்து வந்ததாகவும், கொலையாளியை பிடிக்க 8 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

அதே நேரத்தில் மகாலட்சுமியுடன் உத்தரகாண்ட் மாநிலத்தை சேர்ந்த அஷ்ரப் என்பவர் நெருக்கமாக பழகி வந்ததாகவும், இதே விவகாரத்தில் தான் ஹேமந்த் தாஸ் மகாலட்சுமியை விட்டு பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. அஷ்ரப் பெங்களூருவில் உள்ள ஆண்களுக்கான சலூன் கடையில் வேலை பார்த்து வந்துள்ளார். அவர் மீதும் போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் தான் மகாலட்சுமியை கொலை செய்தாரா? என்று போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதற்கிடையில், மகாலட்சுமியின் செல்போனை ஆய்வு செய்தது, கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில் கொலையாளி பற்றிய முக்கிய துப்பு தனிப்படை போலீசாருக்கு கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பெண் கொலை வழக்கில் போலீசாருக்கு முக்கிய துப்பு கிடைத்திருப்பதால், கூடிய விரைவில் கொலையாளி கைது செய்யப்படுவார் என்று உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்