டெல்லி ஐஐடி மாணவர் தற்கொலை
டெல்லி ஐஐடி மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.;
புதுடெல்லி,
டெல்லி ஐஐடியில் எம்.எஸ்.சி 2ம் ஆண்டு படித்து வந்தவர் குமார் யாஷ். இவர் ஜார்க்கண்ட் மாநிலம் தியோகரை சேர்ந்தவர் ஆவார். குமார் நேற்று இரவு 11 மணியளவில் கல்லூரியின் ஆரவல்லி மாணவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வெகுநேரமாக குமார் வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அவரது நண்பர்கள் கதவை தட்டியுள்ளனர். கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்த நிலையில், அவரது நண்பர்கள் மற்றும் விடுதி ஊழியர்கள் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்றனர்.
அப்போது குமார் இரண்டு துண்டுகளை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார். உடனடியாக அவரது நண்பர்களும், ஊழியர்களும் துண்டுகளை வெட்டி அவரை கீழே இறக்கினர். பின்னர் ஐஐடி ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு குமாரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் முன்பே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து இந்த சம்பவம் பற்றி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனைக்கு வந்த போலீசார் மாணவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார் குமார் தங்கியிருந்த அறையை சோதனை செய்தனர். ஆனால் அறையில் தற்கொலைக்கான கடிதம் எதுவும் கிட்டவில்லை என்று போலீசார் தெரிவித்துள்ளனர். தற்கொலை செய்து கொண்ட மாணவர் மன அழுத்தத்தில் இருந்ததாகவும், அதற்காக சிகிச்சை பெற்று வந்ததாகவும், நேற்று உடல்நிலை பாதித்து ஐஐடி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.