உறுப்பினர்கள் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதால் மாநிலங்களவையில் 10 இடங்கள் காலி

மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான புதிய தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Update: 2024-06-11 23:30 GMT

புதுடெல்லி,

18-வது மக்களவைக்கான தேர்தல் 7 கட்டங்களாக நடந்து முடிந்தது. இந்த தேர்தலில் மாநிலங்களவை உறுப்பினர்களாக இருக்கும் பலரும் மக்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட்டனர். அவர்களில் 10 பேர் தேர்தலில் வெற்றி பெற்று மக்களவைக்கு தேர்வாகி உள்ளனர்.

இதனால் மாநிலங்களவையில் 10 இடங்கள் காலியாகி உள்ளன. இது குறித்த அறிவிப்பை மாநிலங்களவை செயலகம் வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் "18-வது மக்களவைக்கு தேர்வாகி உள்ள 10 மாநிலங்களவை எம்.பி.க்கள் மாநிலங்களவையில் இருந்து நீக்கப்படுகின்றனர். இதனால் அசாம், பீகார் மற்றும் மராட்டியத்தில் தலா 2 மற்றும் அரியானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மற்றும் திரிபுராவில் தலா ஒன்று என 10 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படுகின்றன" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் உறுப்பினர்களாக இருந்து மக்களவைக்கு தேர்வாகி உள்ள உறுப்பினர்களின் விவரம் பின்வருமாறு:-

காமாக்யா பிரசாத் தாசா மற்றும் சர்பானந்தா சோனோவால்- அசாம்; மிஷா பாரதி மற்றும் விவேக் தாகூர்- பீகார்; உதயன்ராஜே போன்ஸ்லே மற்றும் பியூஷ் கோயல்- மராட்டியம்; தீபேந்தர் சிங் ஹூடா- அரியானா; ஜோதிராதித்யா சிந்தியா- மத்திய பிரதேசம்; கே.சி. வேணுகோபால்- ராஜஸ்தான்; பிப்லப் குமார் தேப்- திரிபுரா.

இதனிடையே மாநிலங்களவை செயலகத்தின் இந்த அறிவிப்பை தொடர்ந்து மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான புதிய தேதியை தேர்தல் கமிஷன் விரைவில் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்