காவலர் பணிகளில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு - அரியானா அரசு அறிவிப்பு
காவலர் பணியிடங்களில் அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
சண்டிகர்,
முப்படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் 'அக்னிபத்' என்ற புதிய திட்டம் ஒன்றுக்கு மத்திய அமைச்சரவை கடந்த 14-ந்தேதி ஒப்புதல் வழங்கியது. இந்த திட்டத்தின்படி தேர்வாகும் இளைஞர்கள் 'அக்னி வீரர்கள்' என அழைக்கப்படுவார்கள். இத்திட்டத்தின் கீழ் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள்.
இந்த நிலையில் அக்னிவீரர்களுக்கு கான்ஸ்டபிள், வனக் காவலர் மற்றும் சிறைக் காவலர் போன்ற பணிகளில் 10 சதவீத இடஒதுக்கீடு மற்றும் வயது தளர்வு உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும் என அரியானா மாநில அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து அரியானா முதல்-மந்திரி நயாப் சிங் சயினி கூறுகையில், "மாநில அரசால் தேர்வு செய்யப்படும் கான்ஸ்டபிள், சுரங்கக் காவலர், வனக்காவலர், சிறைக் காவலர் மற்றும் சிறப்புக் காவல் அதிகாரி ஆகிய பதவிகளுக்கான நேரடி ஆட்சேர்ப்புகளில், அக்னிவீரர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும். குரூப்-சி மற்றும் குரூப்-டி பதவிகளில் அக்னிவீரர்களுக்கு 3 ஆண்டுகள் வயது தளர்வு அளிக்கப்படும்" என்று தெரிவித்தார்.