ஜம்மு காஷ்மீரில் 24 தொகுதிகளில் நாளை முதற்கட்ட வாக்குப்பதிவு

காஷ்மீரில் முதல் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது.

Update: 2024-09-16 21:13 GMT

ஸ்ரீநகர்,

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் முதலாவது சட்டசபை தேர்தல் இதுவாகும்.

மேலும் ஒன்றுபட்ட மாநிலமாக இருந்த காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்ட பின் நடைபெறும் முதல் சட்டசபை தேர்தலும் இது என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது.

யூனியன் பிரதேசமாக மாறியிருக்கும் காஷ்மீரில் முதலாவது அரசை அமைப்பதற்கு பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற தேசிய கட்சிகளும், தேசிய மாநாடு, மக்கள் ஜனநாயக கட்சி போன்ற மாநில கட்சிகளும் தீவிரமாக களத்தில் குதித்து உள்ளன.

இதனால் காஷ்மீரில் தீவிர தேர்தல் பிரசாரம் நடந்து வருகிறது. பா.ஜனதா சார்பில் பிரதமர் மோடி, அமித்ஷா மற்றும் மத்திய மந்திரிகள், மூத்த நிர்வாகிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டனர். இதைப்போல காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் கட்சியின் தேசிய மற்றும் உள்ளூர் தலைவர்களும் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டனர்.

மாநில முன்னாள் முதல்-மந்திரிகளான பரூக் மற்றும் உமர் அப்துல்லா (தேசிய மாநாடு), மெகபூபா முப்தி (மக்கள் ஜனநாயக கட்சி) மற்றும் என்ஜினீயர் ரஷித் (அவாமி இத்திகாட் கட்சி) உள்ளிட்ட தலைவர்களும் காஷ்மீர் முழுவதும் சூறாவளி பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.

காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடக்கிறது. இதில் 24 தொகுதிகளுக்கு நாளை (புதன்கிழமை) வாக்குப்பதிவு நடக்கிறது. இதில் 16 தொகுதிகள் காஷ்மீர் பிராந்தியத்திலும், 8 தொகுதிகள் ஜம்முவிலும் உள்ளன. இந்த தொகுதிகளில் அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் சுயேச்சைகள் என 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

இவர்களின் அரசியல் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 23.27 லட்சம் என தேர்தல் கமிஷன் கூறியுள்ளது. இவர்கள் வாக்களிப்பதற்காக மேற்கண்ட தொகுதிகளில் ஏராளமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

நாளை வாக்குப்பதிவு நடைபெறும் இந்த தொகுதிகளில் கடந்த சில நாட்களாக அனல் பறக்கும் பிரசாரம் நடந்தது. இந்த பிரசாரம் நேற்று மாலையுடன் ஓய்ந்தது. அங்கு நேற்று நடந்த இறுதிக்கட்ட பிரசாரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா, உமர் அப்துல்லா, மெகபூபா முப்தி உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தீவிர பிரசாரம் மேற்கொண்டனர்.

குறிப்பாக ஜம்முவில் 3 கூட்டங்களில் பேசிய மத்திய மந்திரி அமித்ஷா, காஷ்மீரில் பயங்கரவாதம் அடியோடு ஒழிக்கப்படும் என வாக்குறுதி அளித்தார். 24 தொகுதிகளிலும் பிரசாரம் ஓய்ந்துள்ள நிலையில் அங்கு வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தொடங்கி உள்ளது. அத்துடன் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளன.

 

Tags:    

மேலும் செய்திகள்