சிறப்பு பிரிவில் 836 இடங்கள் நிரம்பின: என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு தொடக்கம்

என்ஜினீயரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்குகிறது.

Update: 2024-07-29 03:15 GMT

சென்னை,

அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 433 என்ஜினீயரிங் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்த கல்லூரிகளில், அரசு ஒதுக்கீட்டில் ஒரு லட்சத்து 79 ஆயிரத்து 938 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்கள் உள்ளன. இதற்கான, 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, கடந்த 22-ந் தேதி தொடங்கியது. முதல்கட்டமாக, அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வும், பொதுப்பிரிவு மாணவர்களுக்கான சிறப்பு பிரிவு கலந்தாய்வும் நடைபெற்றது.

மொத்தமுள்ள, 9 ஆயிரத்து 639 என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்களில், 836 இடங்கள் மட்டுமே நிரம்பியுள்ளன. இதில், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் சிறப்பு பிரிவில் 92 மாணவர்கள் என்ஜினீயரிங் படிப்புக்கான இடங்களை தேர்வு செய்துள்ளனர்.

 இந்தநிலையில், என்ஜினீயரிங் படிப்புக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வு மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கி 3 சுற்றுகளாக நடைபெறுகிறது. அந்த வகையில், முதல் சுற்று கலந்தாய்வு இன்று முதல் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 10-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதில், பொதுப்பிரிவில் தரவரிசை பட்டியலில் ஒன்று முதல் 26 ஆயிரத்து 654 வரையிலான இடங்களை பிடித்த மாணவர்களும், 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் முதல் ஆயிரத்து 343 இடங்களை பிடித்த மாணவர்களும் பங்கேற்கின்றனர்.

மாணவர்கள் தங்களுடைய விருப்ப கல்லூரிகளை வருகிற 31-ந் தேதி வரையில் தேர்வு செய்யலாம். விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கான, தற்காலிக ஒதுக்கீடு ஆணை ஆகஸ்டு 1-ந் தேதி காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. தற்காலிக ஒதுக்கீடு ஆணையை ஆகஸ்டு 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் மாணவர்கள் உறுதி செய்ய வேண்டும். அதன்பிறகு, என்ஜினீயரிங் கல்லூரிகளை தேர்வு செய்த மாணவர்களுக்கு ஆகஸ்டு 3-ந் தேதி காலை என்ஜினீயரிங் படிப்புக்கான இறுதி ஒதுக்கீடு ஆணை வெளியிடப்படும். இறுதி ஒதுக்கீடு ஆணை பெற்ற மாணவர்கள், ஆகஸ்டு 7-ந் தேதிக்குள் கல்லூரிகளில் சேர வேண்டும்.

கலந்தாய்வு தொடர்பான மேலும் விவரங்களை மாணவர்கள் www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். மொத்தம் 3 சுற்றுகளாக நடைபெறவுள்ள இந்த கலந்தாய்வு வருகிற செப்டம்பர் 3-ந் தேதியுடன் நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்