வள்ளியூர் முருகன் கோவில் கந்தசஷ்டி திருவிழா கொடியேற்றம்
வள்ளியூர் முருகன் கோவிலில் கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டத்தில் பழமை வாய்ந்த குடைவரை கோவிலாக வள்ளியூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டு தோறும் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில் கந்தசஷ்டி திருவிழாவும் ஒன்றாகும். இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை பூஜை நடத்தப்பட்டு கொடிப்பட்டம் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது.
தொடர்ந்து கொடிமரத்திற்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டு தீபாராதனை பூஜை நடந்தது. இதில் வள்ளியூர் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலையில் கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனையும், இரவில் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.
வரும் 7-ந்தேதி சூரசம்ஹாரமான தாரகன் வதம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.