குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில்: ஆலய சிறப்பும், பெயர் காரணமும்

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது.;

Update:2024-09-24 19:35 IST

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ஞானமூர்த்தீசுவரர் உடனுறை முத்தாரம்மன் கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி பெற்றது. இங்கு பல லட்சக்கணக்கான பக்தர்கள் விரதம் இருந்து பல்வேறு வேடங்களை அணிந்து அம்மனை வழிபடுவார்கள். இந்நிலையில் இந்த ஆண்டு தசரா திருவிழா வரும் அக்டோபர் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. 10 நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஒவ்வொரு நாளும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வெவ்வேறு திருக்கோலத்தில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

இந்தியாவில் மைசூருக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில்தான் தசரா திருவிழா பிரமாண்டமாக கொண்டாடப்படுகிறது. `நவராத்திரி' என்றாலே தூத்துக்குடி மாவட்ட மக்களுக்கு `குலசை'தான் நினைவுக்கு வரும். தூத்துக்குடி மட்டுமல்லாமல், வெளி மாவட்டங்களில் உள்ள மக்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்பி 10 நாள்கள் விரதமிருந்தும், வேடமணிந்தும் தசராவில் கலந்துகொள்வார்கள்.பொதுவாக சிவன் சன்னதி தனியாகவும், அம்மன் சன்னதி தனியாகவும்தான் கோவிலில் இருக்கும். ஆனால் குலசையில் முத்தாரம்மன், ஞானமூர்த்தீஸ்வரர் உடன் ஒரே பீடத்தில் இருந்து வடக்கு நோக்கி அருள்பாலிக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் வழியில் 11 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ள கடற்கரை கிராமம் குலசேகரன்பட்டினம். இவ்வூரில் உள்ள முத்தாரம்மன் கோவில் உலக பிரசித்திப் பெற்றது.

ஆலய சிறப்பு:-

அகிலாண்டகோடி பிரமாண்டநாயகி அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றி ஞானமூர்த்தீஸ்வரருடன் ஒருசேர அமர்ந்திருக்கும் அருட்தோற்றம் காண்போரை பக்தி பரவசத்தில் ஆழ்த்தும்.

பொதுவாக பூமியில் இருந்து தானாக சுயம்பு லிங்கம் தோன்றி கோவில்களில் அருள்பாலிப்பதை கேள்விப்பட்டு இருக்கிறோம். குலசேகரன்பட்டினம் திருத்தலத்தில் அன்னை முத்தாரம்மன் சுயம்புவாக தோன்றியிருப்பது அதிசயங்களில் ஒன்று. அதனால் இங்கு அம்மன் சக்தி வாய்ந்தவளாக காட்சி அளிக்கிறாள். தன்னை வழிபடும் பக்தர்களுக்கு முத்தான வாழ்வை அருள்கிறாள்.

முத்தாரம்மன் அருகே ஒரே பீடத்தில் சுவாமி ஞானமூர்த்தீஸ்வரர் வீற்றிருப்பது இந்த ஆலயத்தின் முக்கிய சிறப்பாகும். இதுபோல அம்மனும், சிவனும் ஒருசேர வீற்றிருந்து பக்தர்களுக்கு அருளாசி புரிவது இத்தலத்தில் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது. சிவாலயங்களில் லிங்க வழிபாடு தான் நடைபெறும். ஆனால் இத்திருத்தலத்தில் பரமேஸ்வரன், ஞானமூர்த்தீஸ்வரராக மனிதவடிவில் உள்ளார். அவருடைய திருக்கோலம் வியப்புடன் மீசையுடன் உள்ளது. விருப்பு, வெறுப்பின்றி இந்த உலகை ஆட்சி செய்யும் வகையில் அவர் தனது வலது கையில் செங்கோலை தாங்கி உள்ளார். இடது கையில் திருநீற்று கொப்பரை வைத்துள்ளார்.

 

ஞானம் என்றால் பேரறிவு. மூர்த்தி என்றால் வடிவம் என்று அர்த்தம். ஈஸ்வரர் என்பதற்கு ஈகை சுரப்பவர் என்று பொருள். அதாவது ஞானமூர்த்தீஸ்வரர் என்றால் பேரறிவு உடைய வடிவத்தை தாங்கி ஈகை சுரப்பவர் என்று அர்த்தம். ஞானமுடி சூடியிருப்பதால் இவர் ஞானமூர்த்தியாக விளங்குகிறார்.

முத்தாரம்மன் என்ற பெயர் வரக் காரணம்:

பாண்டியநாட்டை ஆண்ட குலசேகரபாண்டிய மன்னனுக்கு அன்னை முத்தாரம்மன் காட்சி கொடுத்து அருள் வழங்கியதால் இவ்வூர் `குலசேகரன்பட்டினம்' என அழைக்கப்பட்டது.

பாண்டி நாடு முத்துடைத்து என்பர். பாண்டிய மன்னர்கள் முத்துக்களை ஆரமாக கொடுத்து அன்னைக்கு சூட்டி மகிழ்ந்தனர். எனவே அம்பிகை முத்தாரம்மன் என அழைக்கின்றனர். அம்மை போட்டவர்களுக்கு முத்து போட்டதாக கூறுவர். முத்துக்கண்டவர்கள் இங்கு அம்பாள் பீடத்தை சுற்றி நீர் கட்ட செய்வர்.

இதன் மூலம் அம்மை நோய் (முத்து நோய்) குணமாகும். மக்களுக்கு முத்து (அம்மை) போட்டதை ஆற்றி (இறக்கி) எடுத்து காப்பாற்றியதால் `முத்து+ஆற்று+ அம்மன்' என்றாகி, `முத்தாரம்மன்' என பெயர் ஆனது.

அம்மை இறங்குவதற்காக மட்டும் இந்த முத்தாரம்மை அருள் புரியவில்லை. கடன், வியாபார முடக்கம், வழக்கு பிரச்சினை… என சகல துன்பங்களையும் நீக்கி வரம் அருள்வதால்தான் விரதமிருந்து வேடமணிந்து அம்பிகையின் அருளைப் பெற வரும் பக்தர்களின் கூட்டம் ஆண்டுக்காண்டு அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்