திருப்பரங்குன்றம்: 4 துணை கோவில்களுக்கு நாளை மறுநாள் கும்பாபிஷேகம்
இன்று காலை சொக்கநாதர் கோவில் மற்றும் பழனியாண்டவர் கோவிலில் பல்வேறு யாகசாலை பூஜை நடக்கிறது.;

கோப்புப்படம்
திருப்பரங்குன்றம்,
திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் சொக்கநாதர் கோவில், மலை அடிவாரத்தில் பழனியாண்டவர் கோவில், கீழத்தெருவில் குருநாத சுவாமி கோவில், மேலரதவீதியில் பாம்பாலம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில்கள் திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் துணை கோவில்களாகும்.
இங்கு திருப்பணிகள் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகள் ஆகி விட்டது. இதை அறிந்த அறங்காவலர் குழுவினர் தங்களது சொந்த செலவில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் நடத்துவது என்று தீர்மானித்தனர்.
அதன்படி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந் தேதி திருப்பரங்குன்றம் முருகன் கோவிலின் துணை கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. 17-ந் தேதி தொடங்கிய திருப்பணிகள் முழு வீச்சில் நடந்து முடிந்தது. நாளை மறுநாள்(16-ந் தேதி) காலை 9.30 மணியில் இருந்து 11.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
இதற்காக இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணியளவில் சொக்கநாதர் கோவில் மற்றும் பழனியாண்டவர் கோவிலில் தலா 40 சிறிய கலசங்கள் வைத்து பல்வேறு யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) 2-ம் காலம், 3-ம் காலம் யாக சாலை பூஜை நடக்கிறது.
16-ந் தேதி காலையில் 4-ம்யாகசாலை பூஜை நடைபெறுகிறது. இதே போல குருநாத சுவாமி கோவில், பாம்பாலம்மன் கோவிலில் தலா 15 கலசங்கள் வைத்து நாளை, நாளை மறுநாள் 2-ம் காலம் யாகசாலை பூஜை நடக்கிறது. இதில் 35 சிவாச்சாரியார்கள் பங்கேற்கிறார்கள்.