விதவிதமான போட்டோ ஆல்பங்கள்...

நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளுடன் எடுக்கும் புகைப்படங்களில், வழக்கமான படங்களுக்கு பதிலாக வித்தியாசமாக, நகைச்சுவையாக போஸ் கொடுத்திருக்கும் படங்களை தேர்ந்தெடுக்கலாம். இத்தகைய புகைப்படங்களை பார்த்த உடனேயே, அந்த நிகழ்வுகளின் தருணங்கள் ஞாபகத்துக்கு வந்து மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

Update: 2023-07-23 01:30 GMT

திருமணம், வளைகாப்பு, பெயர் சூட்டுதல், பிறந்தநாள், இன்பச்சுற்றுலா, திருவிழா, பண்டிகைக் கொண்டாட்டம் என்று நம்முடைய வாழ்வில் பல்வேறு மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடைபெறும். அவற்றை உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் சேர்ந்து கொண்டாடி மகிழ்ந்திருப்போம். அத்தகைய தருணங்களை மீண்டும் நினைவுகூர்ந்து நெகிழ்வதற்கு உதவுபவை புகைப்படங்கள்.

ஒவ்வொரு புகைப்படத்துக்குள்ளும், ஒரு குட்டிக்கதை ஒளிந்து இருக்கும். புகைப்படங்களை ஒருங்கிணைத்து இருக்கும் ஆல்பங்களைப் புரட்டி பார்க்கும்போது, மனம் குழந்தையைப் போல குதூகலிக்கும். நிகழ்வுகளை ஆவணப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் அவற்றுக்கு பொருத்தமான ஆல்பங்களை, எவ்வாறு தேர்ந்தெடுப்பது என்று தெரிந்துகொள்வோம்.

புகைப்படங்களை தேர்ந்தெடுத்தல்:

ஒவ்வொரு நிகழ்வின்போதும் ஏராளமான புகைப்படங்களை எடுப்பது பலரது வழக்கம். அவற்றை மலரும் நினைவுகளாக மாற்ற, ஆல்பங்களாக உருவாக்குவதுதான் சவாலான பணி.

புகைப்படங்களைத் தேர்வு செய்யும்போது நிகழ்வின் கரு, முக்கியமான நபர்களின் பங்களிப்பு மற்றும் நிகழ்வுக்கு ஏற்றபடியான போஸ் ஆகியவற்றை மனதில் கொள்ள வேண்டும். நண்பர்கள் மற்றும் நெருங்கிய உறவுகளுடன் எடுக்கும் புகைப்படங்களில், வழக்கமான படங்களுக்கு பதிலாக வித்தியாசமாக, நகைச்சுவையாக போஸ் கொடுத்திருக்கும் படங்களை தேர்ந்தெடுக்கலாம். இத்தகைய புகைப்படங்களை பார்த்த உடனேயே, அந்த நிகழ்வுகளின் தருணங்கள் ஞாபகத்துக்கு வந்து மனதுக்குள் மகிழ்ச்சியை உண்டாக்கும்.

பயணம், திருவிழா மற்றும் பண்டிகை நாட்களில் எடுத்த புகைப்படங்களில், அந்த நாட்களை அடையாளப்படுத்தும் விதமான இடங்களில் எடுக்கப்பட்ட புகைப்படங்களைத் தேர்வு செய்யலாம்.

திருமண நிகழ்வுகளில், மணமக்கள் தனித்து எடுத்த புகைப்படங்கள், விருந்தினர்களுடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் என இரண்டு தொகுப்பாக பிரித்து ஆல்பம் தயாரிக்கலாம்.

ஆல்பம் வடிவமைப்பு:

புகைப்படம் மற்றும் புகைப்படத் தொகுப்பின் தேர்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை, ஆல்பத்தின் உள்ளேயும், வெளியேயும் செய்யப்படும் வடிவமைப்பிற்கும் கொடுக்க வேண்டும். புகைப்படத் தொகுப்பின் வடிவமைப்பு, நிகழ்வின் சாராம்சத்துக்கு ஏற்றபடி இருக்கிறதா என்பதை உறுதி செய்ய வேண்டும். நம்முடைய புகைப்படங்களை, ஆல்பத்தின் அட்டைப்படங்களாக வைப்பதற்கு பதிலாக, அந்த நிகழ்வுக்கு ஏற்ற அலங்கார அமைப்பு, இடம் அல்லது பல வண்ணங்கள் கொண்ட கலைப்படைப்பு இவற்றில் ஏதாவது ஒன்றை தேர்ந்தெடுத்தால் தனித்துவமாக இருக்கும்.

ஆல்பங்களை தேர்ந்தெடுத்தல்:

திருமணம்:

ஆல்பத்தின் உள்பக்கங்களுக்கு பளபளப்பான புகைப்படத்தாளையும், வெளிப்புறத்துக்கு வெல்வெட் அல்லது மேட் தாளையும் தேர்வு செய்யலாம். 'ராயல் புக்' வடிவமைப்பை திருமண ஆல்பத்துக்கு தேர்ந்தெடுப்பது சிறந்தது. செவ்வக வடிவம் அல்லது பெரிய அளவிலான சதுர வடிவ ஆல்பத்தை இதற்கு பயன்படுத்தலாம்.

பிறந்தநாள் மற்றும் பிற குடும்ப நிகழ்வுகள்:

உள்பக்கங்களுக்கு பளபளப்பான புகைப்படத் தாளையும், வெளிப்புறத்துக்கு மேட் தாளையும் தேர்ந்தெடுக்கலாம். புகைப்படங்களை பிளாஸ்டிக் கவருக்குள் பொருத்தும் வகையிலான பிளிப் தொகுப்பை இந்த நிகழ்வுகளுக்குப் பயன்படுத்தலாம்.

பயணம், பண்டிகை மற்றும் சிறப்பு நிகழ்வுகள்:

இவற்றுக்கு புத்தக வடிவிலான புகைப்படத் தொகுப்பை தேர்ந்தெடுக்கலாம். இன்ஸ்டெக்ஸ் அல்லது இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்போல, சிறிய மற்றும் சதுர வடிவில் புகைப்படங்களை அச்சிடலாம். நிகழ்வு குறித்த குறிப்பையும் அந்த புகைப்படத்திலேயே குறிப்பிடலாம்.

Tags:    

மேலும் செய்திகள்