குல்பி இட்லி
சுவையான குல்பி இட்லி, மசாலா குழிப்பணியாரம் ஆகியவற்றின் செய்முறை விளக்கத்தை இங்கே பார்க்கலாம்
குல்பி இட்லி
தேவையான பொருட்கள்:
இட்லி அரிசி - 4 டம்ளர்
உளுந்து - 1 டம்ளர்
வெந்தயம் - 1 டீஸ்பூன்
அவல் - ¼ டம்ளர்
ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவையான அளவு
செய்முறை:
இட்லி அரிசியையும், அவலையும் நன்றாக சுத்தம் செய்து ஒரு பாத்திரத்தில் ஒன்றாகக்கொட்டி, தண்ணீர் ஊற்றி மூன்று மணி நேரம் ஊற வைக்கவும். மற்றொரு பாத்திரத்தில் சுத்தம் செய்த உளுந்து மற்றும் வெந்தயத்தை போட்டு தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
பின்பு அரிசி மற்றும் அவலை முதலில் இட்லி மாவு பதத்துக்கு அரைத்துக்கொள்ளவும். அதன் பிறகு உளுந்தையும், வெந்தயத்தையும் அரைக்கவும். இப்போது இரண்டு மாவையும் நன்றாகக் கலந்து ஒரு பெரிய பாத்திரத்தில் ஊற்றி வைக்கவும். இந்தக் கலவையை 8 மணி நேரத்துக்கு புளிக்க வைக்க வேண்டும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
சிறு சிறு டம்ளர்களின் உள்பகுதி முழுவதும் நெய் அல்லது நல்லெண்ணெய் பூசவும். இட்லி மாவை, டம்ளரின் முக்கால் அளவிற்கு மட்டும் ஊற்றி, நடுவில் ஐஸ்கிரீம் குச்சிகளை சொருகவும். இவற்றை இட்லி வேகவைப்பது போல நீராவியில் வேகவைத்து எடுக்கவும். இது ஆறிய பின்பு டம்ளரில் இருந்து மெதுவாக வெளியே எடுக்கவும். இப்போது 'குல்பி இட்லி' தயார்.
சட்னி, குருமா அல்லது சாம்பார் ஆகியவற்றை சிறு சிறு கிண்ணங்களில் ஊற்றி அழகான தட்டில் வைத்து பரிமாறவும்.
மசாலா குழிப்பணியாரம்
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 கப்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 1
கேரட் (துருவியது) - 1
கறிவேப்பிலை (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடுகு - ½ டீஸ்பூன்
சீரகம் - ½ டீஸ்பூன்
பெருங்காயப்பொடி - ¼ டீஸ்பூன்
மஞ்சள்தூள் - ¼ டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
அடுப்பில் வாணலியை வைத்து சூடானதும் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். பின்பு அதில் கடுகு, உளுந்து, சீரகம், கடலைப்பருப்பு ஆகியவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு தாளிக்கவும். பின்னர் அதில் கறிவேப்பிலை, பச்சைமிளகாய், வெங்காயம் போன்றவற்றை ஒவ்வொன்றாகப் போட்டு வதக்கவும்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும் கேரட் துருவல், கொத்தமல்லித்தழை ஆகியவற்றை சேர்த்து கிளறவும். பின்பு மஞ்சள்தூள், பெருங்காயப்பொடி, உப்பு சேர்த்து கிளறி இறக்கவும். இந்தக் கலவை ஆறியதும் இட்லி மாவுடன் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
அடுப்பில் குழிப்பணியாரக் கல்லை வைத்து சூடானதும், அதன் ஒவ்வொரு குழியிலும் ஒரு டீஸ்பூன் அளவு எண்ணெய் ஊற்றவும்.
ஒவ்வொரு குழியிலும் முக்கால் அளவுக்கு மாவை ஊற்றி, இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேகவைத்து எடுக்கவும். இப்போது சுவையான 'மசாலா குழிப்பணியாரம்' தயார். இதை சட்னியுடன் சேர்த்து சுவைக்கலாம்.