ரசிக்க வைக்கும் திருமணப் புகைப்படங்கள்

திருமணத்தில் வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்களைப் பதிவு செய்வது மட்டுமில்லாமல், அதற்கு நடுவில் நடக்கும் சில வேடிக்கையான, உணர்ச்சிகரமான தருணங்களையும் பதிவு செய்யத் தவறக்கூடாது.;

Update: 2023-01-15 01:30 GMT

திருமணப் புகைப்படங்கள் எடுக்கும்போது, ஒரு சில விஷயங்களை கவனித்து செயல்பட்டால், அவற்றை வாழ்நாள் முழுவதும் பாதுகாத்து ரசிக்கும் பொக்கிஷமாக மாற்றலாம். அதற்கான சில ஆலோசனைகள்:

ஆடைகளில் கவனம்:

சடங்கு, சம்பிரதாயங்களைத் தாண்டி சில புகைப்படங்களை வழக்கமானதாக இல்லாமல், வித்தியாசமான முறையில் எடுக்க முயற்சிக்கலாம். திருமண விழாவுக்கு நாம் அணியும் ஆடை விலை உயர்ந்ததாக இருக்கும். அந்த ஆடையுடன் தனிப்பட்ட புகைப்படங்களை எடுக்கும் நேரம், சடங்குகளால் ஏற்படும் சோர்வால் புகைப்படத்தில் முழு கவனம் செலுத்த முடியாமல் போகும். எனவே, குடும்பத்தினருடன் இணைந்து எடுக்கும் தனிப்பட்ட புகைப்படங்களை, திருமணத்திற்கு முன்னதாக சிறிது நேரம் ஒதுக்கி எடுக்கலாம். அவை வழக்கத்திற்கு மாறாக வித்தியாசமாகவும், சந்தோஷமான மனநிலையோடும், ரசிக்கும்படியும் அமையும்.

முன்னேற்பாடு:

திருமணத்திற்கு வரும் அனைவரையும் தனித்தனியாக மணமக்களுடன் நிற்க வைத்து புகைப்படம் எடுக்கும்போது, மணமக்களின் தனிப்பட்ட புகைப்படங்களுக்கு முக்கியத்துவம் தரமுடியாமல் போகும். எனவே, விழாவில் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் உடனான எந்தத் தருணங்களை பதிவு செய்ய வேண்டும் என்பதை முன்னரே புகைப்படக் கலைஞரிடம் பட்டியலிட்டு கொடுக்கலாம். இதனால் வீண் மன உளைச்சலைத் தவிர்க்க முடியும்.

வெளிச்சம் மற்றும் பின்னணி:

புகைப்படங்களை அழகாகத் தெரிய வைப்பது லைட்டிங் மற்றும் பின்னணிதான். தடிமனான வண்ண விளக்குகள், டிஸ்கோ விளக்குகள் போன்றவை புகைப்படங்களின் அழகைக் குறைக்கும். மென்மையான சுற்றுப்புற ஒளி, புகைப்படம் எடுப்பதற்கு சிறந்ததாக இருக்கும். எனவே, திருமணம் நடக்கும் முக்கிய பகுதியில் 'போட்டோ பிரண்ட்லி ஸ்பாட் லைட்'களை அமைக்க வேண்டும். இந்த விளக்குகள், மணமக்களைச் சுற்றிலும் இருக்குமாறு அமைப்பது சிறந்தது. எடுக்கும் புகைப்படங்கள் அழகாக அமைவதற்கு சிறந்த பின்னணி அவசியம்.

மணமக்களின் உடையும், அலங்காரமும் பின்னணிக்கு ஏற்றவாறு இருக்க வேண்டும். திறந்தவெளி பின்னணியாக இருந்தாலும், அதற்கேற்ற உடையும், அலங்காரமும் முக்கியமானது.

வேடிக்கையான தருணங்கள்:

திருமணத்தில் வழக்கமான சடங்கு, சம்பிரதாயங்களைப் பதிவு செய்வது மட்டுமில்லாமல், அதற்கு நடுவில் நடக்கும் சில வேடிக்கையான, உணர்ச்சிகரமான தருணங்களையும் பதிவு செய்யத் தவறக்கூடாது. புகைப்படம் எடுக்கும்போது சிலை போல 'போஸ்' கொடுக்காமல், இயல்பாக இருக்க முயலுங்கள். அதை அப்படியே பதிவு செய்யும்போது, 'கேண்டிட் ஷாட்'களுக்கு சிறப்பானதாக இருக்கும். ஒரே போஸில் நின்று எடுக்கும் புகைப்படங்கள், சிறிது நேரத்தில் செயற்கையாக இருப்பதாகத் தோன்றும். அதற்கு மாற்றாக, பிறருடன் சிரித்து பேசுவது, செல்லமாகக் கொஞ்சுவது, உணர்ச்சியை வெளிப்படுத்தும் தருணம் போன்றவற்றை பதிவு செய்யலாம். முக்கிய தருணத்தை 'போட்டோ பிரேம்'களாகவும் செய்து வீட்டில் மாட்டலாம். சிறு சிறு நிகழ்வுகளுக்கு முக்கியத்துவம் தந்தால், திருமணப் புகைப்படங்களைக் காலங்கள் கடந்தும் ரசிக்கலாம்.

Tags:    

மேலும் செய்திகள்