பணத்தின் முக்கியத்துவத்தை கற்றுக்கொடுங்கள்
குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும்.;
குடும்பத்துக்காக பட்ஜெட் போடும்போது மாதாந்திர செலவுகள் மட்டுமல்லாமல், குடும்ப உறுப்பினர்களின் தேவையைப் பூர்த்தி செய்வதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதில் குழந்தைகளுடைய தேவைகளை, அவர்களாகவே பூர்த்தி செய்யும் வகையில் தனிப்பட்ட நிதியை ஒதுக்கலாம். இந்த நிதியை குழந்தைகளின் பங்களிப்புடன் உருவாக்கும்போது, சேமிக்கும் ஆர்வத்தை மேலும் அதிகரிக்க முடியும்.
இதற்கான சில வழிகள்:
சேமிப்புக் கணக்கு தொடங்குங்கள்:
குழந்தைகளுக்கான நிதி தேவை எப்போது வேண்டுமானாலும் அதிகரிக்கலாம். இதில் அவர்களின் தினசரி தேவையை விட, நீண்ட காலத் தேவையை நிறைவேற்றுவதுதான் முக்கியமானது. இதற்காக, குழந்தைகள் பெயரில் வங்கியிலோ, தபால் நிலையத்திலோ தனியாகச் சேமிப்புக் கணக்கு தொடங்கலாம். குழந்தைகளுக்குத் தரப்படும் நிதியை அவர்கள் மூலமாகவே கணக்கில் செலுத்தி, சேமிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தலாம்.
ஊக்கத்தொகை வழங்குங்கள்:
நீங்கள் சொல்லும் வேலைகளை குழந்தைகள் சிறப்பாகச் செய்யும்போது, அதைப் பாராட்டும் வகையில் ஊக்கத்தொகை கொடுக்கலாம். இந்த நிதியைக் குழந்தைகளுக்கான தனிப்பட்ட நிதியாகக் கருதச் செய்வது அவசியம். குடும்ப பட்ஜெட் போடும்போது, குடும்பத்தில் ஒவ்வொருவரும் தங்களது பங்களிப்பை தருவது போல், குழந்தைகளையும் பங்களிக்க செய்ய வேண்டும். இதன் மூலம் அவர்களுக்கு குடும்பத்தின் நிதி நிலைமை, அதை மேம்படுத்துவதற்கான வழிகள் என அனைத்தையும் கற்பிக்க முடியும்.
பணம் சம்பாதிக்கும் வழிகள்:
குழந்தைகள் வளரும் போதே அவர்களுக்கு பணத்தின் தேவை குறித்தும், அதை எவ்வாறு ஈட்ட வேண்டும் என்றும் கற்றுக் கொடுக்க வேண்டும். ஈட்டும் பணத்தைக் கல்வித் தேவைக்குப் பயன்படுத்தும் முறையையும் கற்றுக் கொடுப்பது நல்லது.
சிறு வயதில் குழந்தைகள் பயன்படுத்திய விளையாட்டு சாமான்களில், நல்ல நிலையில் இருக்கும் பொருட்களை, தேவையானவர்களுக்கு விற்பது, தங்களின் திறமையைப் பயன்படுத்தி உருவாக்கும் பொருட்களை விற்பனை செய்வது, பள்ளிப் படிப்புடன், பகுதி நேர வேலையை மேற்கொள்வது போன்ற வேலைகளை செய்து பணம் ஈட்டுவது பற்றி பெற்றோர் பிள்ளைகளுக்குக் கற்றுத் தர வேண்டும். இவற்றால், எதிர்பாராத பணத்தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.
பண இலக்குகள்:
குழந்தைகளுக்கு, பணத்தின் அவசியத்தை புரிய வைக்க வேண்டும். இதற்காக, குறுகிய கால பண இலக்குகளை உருவாக்குவது அவசியம். இந்த இலக்கு 6 மாதம் முதல் ஓர் ஆண்டு வரை, கால அளவை கொண்டிருக்கலாம். இதைக் குழந்தைகள் மட்டும் இல்லாமல், அனைத்து குடும்ப உறுப்பினர்களும் செய்யும்போது, ஈடுபாடும் அதிகரிக்கும்.
விடுமுறை நாட்களில் சுற்றுலா செல்லத் திட்டம் போடுவது, நீண்ட நாட்களாக வாங்க நினைக்கும் பொருட்களை வாங்கத் திட்டமிடுவது, குழந்தைகள் விரும்பும் விளையாட்டுப் பொருட்களை வாங்குவது போன்றவை இதில் அடங்கும்.
குழந்தைகளுக்குப் பண சுதந்திரம் அளிப்பதுடன், அதை எப்படி சம்பாதிப்பது, எப்படிச் சேமிப்பது, எதற்குச் செலவழிப்பது என்பதைக் கற்றுக் கொடுத்தால், வளர்ந்தபின் எந்தவித பண நெருக்கடியையும் எளிதில் சமாளிக்கும் பண்பு உருவாகும்.