சுழன்றாடும் பெண்கள்

‘புகுடி’ நடனமாடும் பெண்கள், தங்கள் கைகளில் தேங்காய்களை சுமந்து கொண்டு ஆடுகிறார்கள். ரஹாத், ஜிம்மா, கிர்கி, சைக்கிள், பஸ் புக்டி, கார்வார், குமா, கொம்ப்டா மற்றும் பக்வா ஆகியவை ‘புகுடி’ நடனத்தின் துணை வடிவங்களாகும்.

Update: 2022-07-03 01:30 GMT

ல்வேறு மதங்கள் மற்றும் கலாசாரங்கள் இணைந்திருக்கும் தேசமான நம் இந்திய திருநாட்டில், கலை, இசை மற்றும் நடனம் போன்றவற்றிலும் பல வகைகள் உள்ளன. ஒவ்வொரு மாநிலத்திற்கும் அவர்களின் பாரம்பரிய நடனம் அடையாளமாக இருக்கிறது. தமிழ்நாட்டிற்கு பரதநாட்டியம், கேரளத்தில் கதகளி, ஒடிசாவில் குச்சுப்புடி என்பதுபோல கோவா மாநிலத்தின் பாரம்பரிய நடனம் 'புகுடி'. அந்த நடனத்தின் வரலாறு, அதன் சிறப்பு என்ன என்பது பற்றிய குறிப்புகள் இதோ.

இந்தியாவின் மிகச் சிறிய மாநிலங்களில் ஒன்றான கோவாவின் பாரம்பரிய நடனமான 'புகுடி' கிராமிய நடன வகையைச் சார்ந்தது. கோவாவில் வாழும் கொங்கன் பிரிவு மக்கள் இந்த நடனம் ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். 'புகுடி' அந்த

மக்களின் மனநிலை மற்றும் வாழ்க்கை முறையை பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

விநாயகர் சதுர்த்தி போன்ற திருவிழாக்களின் போது இந்த நடனம் ஆடப்படும். பெண்கள், திருவிழா காலத்தில் தங்கள் வழக்கமான வேலைகளை எல்லாம் ஒதுக்கி வைத்துவிட்டு, இந்த நடனம் ஆடுவதற்கு தங்களை தயார்செய்து கொள்வார்கள். மக்கள் தங்கள் மகிழ்ச்சியை அல்லது கடவுள் நம்பிக்கையை வெளிப்படுத்த இந்த நடனத்தை எப்போது வேண்டுமானாலும் ஆடுவார்கள்.

'புகுடி' நடனம் கோவா கலாசாரத்தின் பழமையான பாரம்பரியத்தில் இருந்து உருவானது. கோவாவில் வசிக்கும் மேய்ப்பர் சமூகத்தைத் சேர்ந்த 'தங்கர்' இன பெண்கள், இந்த நடனத்தை பெண் கடவுள் மகாலட்சுமி வழிபாட்டின்போது ஆடுகிறார்கள். நடனத்தின் தொடக்கத்தில் கடவுள்களுக்கு நன்றி தெரிவிப்பார்கள். பின்னர் சத்தமாகப் பாடிக்கொண்டே மெதுவாக நடனமாடுவார்கள்.

நடனத்தின் தாளம் ஒவ்வொரு நொடியும் அதிகரிக்கும். இறுதிக்கட்டத்தில் கைகள் மற்றும் கால்களின் அசைவின் வேகத்தை அதிகரிக்கும் பெண்கள், 'பூ' என்ற ஒலியுடன் சத்தமாக சுவாசித்து, வேகமாக ஆடுவார்கள். இதன்காரணமாகவே இந்த பாரம்பரிய நடனத்திற்கு 'புகுடி' என்று பெயர் உண்டானது. இந்த நடனத்தில் பெண்கள் முழுமையாக சோர்வடைந்து உட்காரும் வரை சுழன்று ஆடிக்கொண்டே இருப்பார்கள்.

'புகுடி' நடனமாடும் பெண்கள், தங்கள் கைகளில் தேங்காய்களை சுமந்து கொண்டு ஆடுகிறார்கள். ரஹாத், ஜிம்மா, கிர்கி, சைக்கிள், பஸ் புக்டி, கார்வார், குமா, கொம்ப்டா மற்றும் பக்வா ஆகியவை 'புகுடி' நடனத்தின் துணை வடிவங்களாகும். மேலும் அவை அந்தந்த கிராமங்களில் மிகவும் பிரபலமான 'புகுடி' நடனமாகக் கருதப்படுகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்