விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு முறைகள்
விளையாட்டு மைதானத்தில் உள்ள உபகரணங்களில் விளையாடும்போது, குழந்தைகள் அணியும் ஆடையில் கவனம் வேண்டும். சறுக்கு மரம் போன்றவற்றின் மேலே ஏறி விளையாடுகையில் ஆடைகள் சிக்கிக்கொண்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது.;
குழந்தைகள் வீட்டுக்குள்ளேயே இருந்து மொபைல் போன் மற்றும் கணினிக்குள் மூழ்கிவிடாமல், விளையாட்டு மைதானத்துக்குச் சென்று மற்ற பிள்ளைகளுடன் சேர்ந்து விளையாடுவதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும்.
அதேசமயம் விளையாட்டு மைதானம், குழந்தைகள் விளையாடுவதற்கு ஏற்ற பாதுகாப்புடன் இருக்கிறதா என்பதை பெற்றோர் உறுதிப்படுத்த வேண்டியது முக்கியம். அதற்கான சில வழிகள்:
உபகரணங்களை கவனியுங்கள்:
விளையாட்டு மைதானத்தில் குழந்தைகள் ஓடுவது, குதிப்பது, தாவுவது என பல செயல்களில் ஈடுபடலாம். இதனால் சில நேரங்களில் மைதானத்தில் இருக்கும் உபகரணங்கள் மீது மோதி காயப்பட நேரிடலாம்.
அப்படி உபகரணங்கள் சேதம் அடைந்து அல்லது செயலிழந்து இருந்தால் விளையாட்டு மைதான மேற்பார்வையாளரிடம் தெரிவித்து உடனடி யாக சரி செய்ய வேண்டும்.
மைதானத்தில் சக நண்பர்களுடன் விளையாடும்போது ஒருவர் மற்றொருவருடன் சண்டை போடுவது, குறும்பு செய்வது, தள்ளுவது போன்றவை ஆபத்தானது என்பதை குழந்தைகளுக்கு உணர்த்த வேண்டும்.
ஆடையில் அக்கறை:
விளையாட்டு மைதானத்தில் உள்ள உபகரணங்களில் விளையாடும்போது, குழந்தைகள் அணியும் ஆடையில் கவனம் வேண்டும். சறுக்கு மரம் போன்றவற்றின் மேலே ஏறி விளையாடுகையில் ஆடைகள் சிக்கிக்கொண்டு காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அதிக இறுக்கமாகவோ, தளர்வாகவோ இல்லாமல், சரியான அளவிலான உடைகளை அணிய வேண்டும். கழுத்தணிகள், துப்பட்டா, மினிபர்ஸ், கயிறு போன்றவற்றை கழற்றிவிட்டு பின்னர் விளையாட அனுமதிக்கவும்.
வயதுக்கேற்ற உபகரணங்கள்:
காயங்கள் மற்றும் விபத்துக்களின் அபாயத்தைத் தடுக்க, குழந்தைகள் வயதுக்கு ஏற்ற விளையாட்டுக் கருவியுடன் விளையாடுவதை உறுதி செய்ய வேண்டும். 2 முதல் 5 வயதுள்ள குழந்தைகள் அதிக உயரம் இல்லாத பாதுகாப்பான விளையாட்டு உபகரணங்களில் விளையாடுவது நல்லது.