'வாசனை திரவியங்கள்'- சில சுவாரசியமான தகவல்கள்

நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு ‘ஒல்பாக்‌ஷன்’ எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.

Update: 2023-01-29 01:30 GMT

வாசனை திரவியங்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக மக்களிடையே பிரபலமாக இருக்கின்றன. எகிப்து, சர்வதேச வாசனை திரவிய வர்த்தகத்தில் முதலாவதாக விளங்கியது. அந்த நாட்டு மக்கள் வாசனை திரவியங்களை 'கடவுளின் வியர்வை' என்று நம்பினார்கள். அந்தக் காலத்தில் தயாரிக்கப்பட்ட வாசனை திரவியங்களில் 'லவங்கப்பட்டை' முக்கியப் பொருளாக சேர்க்கப்பட்டது.

கிரேக்கர்களும் வாசனை திரவியங்களை விரும்பி பயன்படுத்தினர். சில வாசனைகள் ஆரோக்கியத்தையும், உயிர்ச்சக்தியையும் மேம்படுத்துவதாக அவர்கள் நம்பினர்.

உலகம் முழுவதும் அந்தக் காலத்தில், அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், வணிகர்கள் போன்ற உயர்தட்டு மக்களிடையே வாசனை திரவியங்கள் அதிகம் புழக்கத்தில் இருந்திருக்கிறது. தற்போது வாசனை திரவியங்கள் உற்பத்தி செய்யும் பிரபல நாடுகளின் பட்டியலில் முன்னணியில் இருப்பது பிரான்சு.

நல்ல வாசனை திரவிய உற்பத்தியாளருக்கு 'ஒல்பாக்ஷன்' எனும் திறன் இருக்க வேண்டியது முக்கியம். அதாவது நறுமணங்களை முகர்ந்து பார்க்கும் திறன். இதன் அடிப்படையில் முதலில் 250 திரவங்களை முகர்ந்து பார்த்து அடையாளம் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை விதியாகவே நிர்ணயித்திருக்கிறார்கள்.

வெயில் காலத்தில் லேசான நறுமணம் கொண்ட திரவியங்களையும், குளிர்காலத்தில் அடர்ந்த வாசம் கொண்ட திரவியங்களையும் பயன்படுத்தலாம். வாசனை திரவியம் வாங்கும்போது, மணிக்கட்டின் மீது பூசி அந்தப் பகுதியில் ஒவ்வாமை எதுவும் ஏற்படவில்லை என்றால் மட்டுமே வாங்குவது நல்லது.

வாசனை திரவியங்களை வாங்கும்போது, மணிகட்டின் பின்பகுதி அல்லது கழுத்துப் பகுதியின் கீழ் பூசி பரிசோதிப்பது ஏன் தெரியுமா? அந்தப் பகுதிதான் நம் உடலின் 'பல்ஸ் பாயிண்ட்'. அங்கு இருக்கும் ரத்த நாளங்கள் உடல் வெப்பத்தை சீக்கிரம் வெளிப்படுத்தும். இதனால், வாசனை திரவியத்தின் நறுமணம் மற்றும் அதன் விளைவு எளிதாகத் தெரியும்.

நீங்கள் வாசனை திரவியம் பயன்படுத்த ஆரம்பிக்கும் சில நிமிடங்களிலேயே, அந்த நறுமணத்துக்கு உங்கள் மூளை பழக்கமாகி விடும். அதன் பிறகு உங்கள் வாசனையையும், வாசனை திரவியத்தையும் உங்களால் தனித்தனியே பிரித்து நுகர முடியாது.

ஒரே வகையான வாசனை திரவியம், இரண்டு நபர்களின் உடலில் வெவ்வேறு விதமான வாசனைகளைக் கொடுக்கும். இதற்கு உடலின் இயற்கையான வாசம், வியர்வை, வெளிப்புற தூசு, மாசுபாடு போன்றவையும் காரணமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்