பெண்களுக்கு ஏற்ற, பகுதி நேர தொழில் 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'

ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும்.

Update: 2023-04-23 01:30 GMT

ண் மை, 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக அழகுக்காகவும், மருத்துவ நன்மைகளுக்காகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது ஆரம்ப காலத்தில் பசுங்கற்பூரம், நெய், தாவர எண்ணெய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்பட்டது. தற்போது, வணிக ரீதியான லாபம் பெற இயற்கை பொருட்களுடன் ரசாயனங்கள் கலந்து தயாரிக்கப்பட்டு வருகிறது. சிலவகை கண் மைகளில் 'ஈயம்' மூலக்கூறுகள் அதிகமாக சேர்க்கப்படுகிறது. இவை கண் தசைகளை சேதப்படுத்துவதோடு மட்டுமில்லாமல், பார்வைத் திறனையும் பாதிக்கக்கூடும். எனவே, இயற்கையான பொருட்களைக்கொண்டு தயாரிக்கப்படும் ஆர்கானிக் கண் மைகளைப் பயன்படுத்துவது நல்லது.

ஆர்கானிக் கண் மைகளில் கண்களுக்கு நன்மை தரக்கூடிய இயற்கையான மூலப்பொருட்கள் சேர்க்கப்படுகின்றன. இவை கண்களின் ஈரப்பதத்தை பாதுகாத்து, அவற்றை நீரேற்றமாக வைத்திருக்க உதவும். கண்களுக்கு பிரகாசத்தையும், புத்துணர்வையும் கொடுக்கும். கண்களின் தசைகளை வலுப்படுத்தி பார்வைத் திறனை மேம்படுத்தும்.

ஆர்கானிக் சாதனம் சுத்தமான முறையில் வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இது பெண்கள் பெரிதும் விரும்பும் அழகு சாதனப் பொருள் என்பதால், இதனை தயாரித்து விற்பனையும் செய்யலாம். பகுதி நேர சுயதொழிலாக செய்வதற்கு ஏற்றது 'ஆர்கானிக் கண் மை தயாரிப்பு'.

எந்த ஒரு பொருளையுமே, விற்பனை செய்யும் முன்பு முதலில் அதனை நாம் பயன்படுத்திப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்முடைய தயாரிப்பைப் பற்றி நம்பிக்கையுடன் மற்றவர்களிடம் எடுத்துச் சொல்ல முடியும். முதலில் இதைச் சிறிய அளவில் செய்து நீங்கள் உபயோகித்துப் பாருங்கள். பிறகு சந்தைப்படுத்த ஆரம்பிக்கலாம்.

தேவையான பொருட்கள்:

பெரிய அளவு மண் அகல் - 1

சந்தனத்தூள் - 2 டேபிள் ஸ்பூன்

வெள்ளை நிற பருத்தி துணி - 1 சிறிய துண்டு

பசுநெய் - 3 டேபிள் ஸ்பூன்

பாதாம் பருப்பு - 1

சிறிய அகலமான கண்ணாடி குப்பி - 1

டீஸ்பூன் - 1

செய்முறை:

சந்தனத்தூளில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, டீஸ்பூன் மூலம் கட்டியில்லாமல் கரைத்துக்கொள்ளுங்கள். அதில் பருத்தித் துணியை நன்றாக நனைத்து நிழலில் உலர்த்துங்கள். பிறகு, அதைத் திரி போல சுருட்டிக் கொண்டு, அகல் விளக்கில் வைத்து நெய் ஊற்றி தீபத்தை ஏற்றுங்கள்.

விளக்கின் இரண்டு பக்கமும் நீளமான டம்ளர்களை ஸ்டாண்ட் போல வைத்து, எவர்சில்வர் அல்லது மண் தட்டு ஒன்றை அவற்றின் மீது கவிழ்த்து வையுங்கள்.

பாதாம் பருப்பை ஒரு இடுக்கியால் பிடித்துக் கொண்டு விளக்கில் காண்பிக்க வேண்டும். அது நன்றாக எரிந்ததும் ஆறவைக்கவும். பின்பு அதை ஒரு சிறிய உரலில் போட்டு இடித்து தூளாக்கிக்கொள்ளவும்.

அகலில் நெய் தீர்ந்ததும் அதை அணைத்து, அதன் மேலே கவிழ்த்திருக்கும் தட்டை சிறிது நேரம் ஆற வைக்கவும். பிறகு தட்டை எடுத்து பார்த்தால் அதன் மீது கரி படிந்திருக்கும். அதனை டீஸ்பூனால் சுரண்டி சேகரித்து கண்ணாடி குப்பியில் கொட்டவும். அதனுடன் பொடித்து வைத்திருக்கும் பாதாம் கரியையும் கலந்து கொள்ள வேண்டும். கண்ணாடி குப்பியை காற்று புகாமல் மூடி வைக்கவும். இதை நெய் அல்லது விளக்கெண்ணெய் சேர்த்து நன்றாகக் குழைத்து பயன்படுத்தலாம்.

Tags:    

மேலும் செய்திகள்