கைவினையில் கலக்கும் நளினி
விழாக் காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கைவினைப் பொருட்கள் செய்வதற்கான வேலையை ஆரம்பித்து விடுவோம். இதில் ஆர்வம் அதிகமாகவே, ஆயில் பெயிண்டிங், எம்பிராய்டரி, ஸ்வெட்டர், மணியில் அலங்காரம் என ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டோம்.;
"மற்றவர்களின் விமர்சனங்களைப் பற்றி கவலைப்படாமல் முயற்சி செய்தால், எதையும் செய்ய முடியும்" என்கிறார் நளினி. தற்போது பெங்களூருவில் வசிக்கும் இவர், தஞ்சாவூரைச் சேர்ந்தவர். சிறு சிறு மணிகளைக் கொண்டு, நளினி செய்யும் கைவினைப் பொருட்கள் இளைஞர்களை வெகுவாகக் கவர்கின்றன. சமூக வலைத்தளங்கள் மூலமாக விற்பனை செய்ய ஆரம்பித்து, தனது கலைத் திறமையை வெற்றிகரமான சுய தொழிலாக மாற்றி இருக்கிறார். அவரது பேட்டி…
''எனது அப்பா வெங்கட்ராமன், ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி. அம்மா கனகவல்லி, ஓய்வு பெற்ற ஆசிரியர். எனக்கு இரு தங்கைகள் மற்றும் தம்பிகள். எனது அப்பா நவராத்திரி மற்றும் பண்டிகைக் காலங்களில் தேவையான அலங்காரப் பொருட்களை அவரே செய்வதோடு மட்டுமில்லாமல், எங்களையும் அவற்றை செய்வதற்கு ஊக்குவிப்பார்.
விழாக் காலங்களில் ஒரு மாதத்திற்கு முன்பாகவே கைவினைப் பொருட்கள் செய்வதற்கான வேலையை ஆரம்பித்து விடுவோம். இதில் ஆர்வம் அதிகமாகவே, ஆயில் பெயிண்டிங், எம்பிராய்டரி, ஸ்வெட்டர், மணியில் அலங்காரம் என ஒவ்வொன்றாகக் கற்றுக் கொண்டோம்.
திருமணம் முடிந்த பிறகு, குடும்பத்தின் உதவியோடு நிறைய பயிற்சி முகாமில் சேர்ந்து ஸ்கிரீன் பிரிண்டிங், டெக்ஸ்டைல்ஸ் பிரிண்டிங், குவில்லிங் வால் ஹேங்கிங்ஸ் ஆகியவற்றையும் கற்றுக் கொண்டேன்.
கணவர் கொடுத்த ஊக்கத்தால் பெண்கள் குழுவாக சேர்ந்து, பல போட்டிகளில் கலந்துகொண்டு பரிசுகள் வாங்கினேன். சேலம் மற்றும் சென்னையில் நடைபெற்ற கண்காட்சி ஸ்டால்களில், நான் செய்த கைவினைப் பொருட்களை விற்பனை செய்ய ஆரம்பித்தேன். இதன் மூலம் வருமானம் வரவே, இதையே தொழிலாகச் செய்யத் தொடங்கினேன். அவ்வாறு செய்ய ஆரம்பித்தவை தான் மணியால் ஆன கைவினைப் பொருட்கள்.
கொரோனா காலத்தில், என்னுடைய சமூக வலைத்தள பக்கத்தில் வெளியான இவை பலரையும் ஈர்த்தன. நிறைய பேர் ஆர்டர் கொடுக்கவும், ஆன்லைன் வகுப்புகள் மூலம் கற்றுக் கொள்ளவும் விரும்பினர்.
எனது தங்கைகளும் எனக்கு உதவினார்கள். எனவே மணிகளைக் கொண்டு புதிது புதிதாக படைப்புகளை உருவாக்குகிறோம். இளம் தலைமுறையினருக்குத் தேவையான, அவர்கள் வைத்து விளையாடும் வகையிலும், பயன்படுத்தும் வகையிலும் அமையுமாறு பொருட்கள் தயாரிப்பதில் கவனம் செலுத்துகிறோம். தற்போது திருமண விழாக்களுக்கான பொம்மைகள் செய்கிறோம். அதற்கான வரவேற்பு அதிகம்.
இதற்காக நாங்கள் தேர்ந்தெடுக்கும் மணிகளை சிறியது மற்றும் பெரியது என்று வகைப்படுத்தி வாங்குகிறோம். முக்கியமாக வண்ணங்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருக்கிறோம்.
தற்போது பல்லாங்குழி, தாயக்கட்டை, பரமபதம் போன்ற விளையாட்டு சம்பந்தப்பட்ட பொருட்களைச் செய்ய முடிவு செய்து, அதற்கான வேலையில் ஈடுபட்டிருக்கிறோம். 'சிறிய அளவு மணிதானே அதை வைத்து என்ன செய்துவிட முடியும்' என்று நிறைய பேர் கிண்டலும், கேலியும் செய்துள்ளனர். 'பேசுபவர்கள் பேசத்தான் செய்வார்கள். ஆனால் நம் முயற்சியில் பின்தங்கிவிடக் கூடாது' என்று தொடர்ந்து முயற்சித்து வெற்றி கண்டோம். முயற்சிக்கு என்றும் தோல்வியே கிடையாது. முயற்சி நம்மை தோற்கவும் விடாது'' என்றார்.